சிந்துசமவெளி மக்களின் ‘ஸ்வஸ்திக்’ குறியீடு!

By குள.சண்முகசுந்தரம்

சி

வகங்கை கீழடியில் கிடைத்த பொருட்கள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தையவை என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா உறுதி செய்திருக்கும் நிலையில், சிந்து சமவெளி மக்கள் முத்திரையாகப் பயன்படுத்திய ‘ஸ்வஸ்திக்’ குறியீடுகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் வடலூரில் கிடைத்துள்ளன.

கடலூர் மாவட்டம் வடலூர் அய்யன் ஏரி. இப்பரந்த ஏரியை முதலாம் பராந்தக சோழன் வெட்டியதாகவும் அவனுக்குப் பிறகு, இரண்டாம் கோப்பெருஞ்சிங்க பல்லவன் திருத்தியதாகவும் வரலாற்றுத் தரவுகள் சொல்கின்றன. அண்மையில் இந்த ஏரி தூர்வாரப்பட்டபோது இதன் அடியிலிருந்து கருப்பு - சிவப்பு நிற மட்கல ஓடுகள், வழுவழுப்பான கருப்பு மற்றும் செங்காவி நிற ஓடுகள் என ஏராளமான வரலாற்று எச்சங்கள் கிடைத்துள்ளன.

‘ஸ்வஸ்திக்’ குறியீடு

இவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்த சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், ”இங்கு கிடைத்த கருப்பு - சிவப்பு நிறத்திலான பானை ஓடுகளின் மேல்பகுதியில், மட்பாண்டங்களை சுடப்பட்ட பிறகு கீறப்பட்ட கீறல் குறியீடுகள் உள்ளன. கருப்பு - சிவப்பு நிறமுடைய சிறியவகை மண் தட்டில் திரிசூலம் போன்ற குறியீடும் உள்ளது. இத்தகைய குறியீடு கொண்ட பொருட்கள் ஏற்கெனவே, புவனகிரி அருகே வடஹரிராஜபுரம், தர்மநல்லூர், பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிப் பாளையம் ஆகிய ஊர்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளன. கூடுதலாக இங்கு கிடைத்திருக்கும், ‘ஸ்வஸ்திக்’ குறியீடுகள் கொண்ட செங்காவி பூசப்பட்ட பானை ஓடு மிக முக்கியமான தடயம். சிந்துசமவெளி நாகரிகத்து மக்கள் பயன்படுத்திய முத்திரைகளில் ‘ஸ்வஸ்திக்’ குறியீடுகள் இருந்தன. அதே குறியீடு இங்கு கிடைத்திருக்கும் பானை ஓட்டிலும் இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது” என்றார்.

தொன்மையான குறியீடுகள்

‘ஸ்வஸ்திக்’ குறியீட்டை ஆய்வு செய்த தமிழக தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர்(ஓய்வு) கி.ஸ்ரீதரன், சிவகங்கை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சு.கண்ணன் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், “1965-69-ம் ஆண்டுகளில் உறையூரிலும் 1985-90-ம் ஆண்டுகளில் ஈரோடு கொடுமணலிலும் 1962-63-ல் குளித்தலை அருகே திருக்காம்புலியூரிலும் 2015-16-ல் நாகை அம்பல் பகுதியிலும் நடந்த அகழாய்வுகளில் இதுபோன்று ‘ஸ்வஸ்திக்’ குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தொன்மையான இந்தக் குறியீடுகள் கி.பி. 3-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ளன.” என்றனர்.

அய்யன் ஏரி பகுதியில் வாழ்ந்த பெருங்கற்காலத்து மக்கள், இதன் மேற்குப் பகுதி நிலப்பரப்பை இடுகாட்டுப் பகுதியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அங்கு, ராமலிங்கம் என்பவரது நிலத்தில் கடந்த 1983-ல் செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்து நான்கு அடி ஆழத்தில் முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. அவற்றுள், கருப்பு - சிவப்பு நிறத்தில் சிறியவகை மட்கலன்கள், வழுவழுப்பான கருப்பு நிற மட்கலன்கள், இரும்புப் பொருட்கள் உள்ளிட்டவை இருந்தன.

“இந்தத் தகவல்கள், வடலூர் பகுதியில் பெருங்கற்காலத்து மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன.” என்று சொல்லும் சிவராமகிருஷ்ணன், “ஆரம்பத்தில், தமிழ் மொழியானது குறியீடுகளாக வடிவம் பெற்று, பிறகு படிப்படியாக பரிணாமம் அடைந்து வரி வடிவமானது. பெருங்கற்காலத்து மக்கள் வாழ்ந்த பகுதிகளில் நடத்தப்படும் பெரும்பாலான ஆகழாய்வுகளில், கீழ் மண்ணடுக்கில் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகளும் அதற்கு மேல் உள்ள அடுக்கில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் கிடைத்துவருகின்றன. வடலூர் பகுதியில் வாழ்ந்த பெருங்கற்காலத்து மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த குறியீடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு அய்யன் ஏரியில் நமக்குக் கிடைத்திருக்கும் தடயங்களே சான்று” என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்