‘கே
ரளத்தில், விபத்தில் அடிபட்ட ஒருவருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுத்திருக்கிறார்கள். இதனால், ஏழு மணி நேரமாக அலைக்கழிக்கப்பட்ட அந்த நபரின் உயிர் ஆம்புலன்ஸிலேயே போய்விட்டது’ - நெல்லையைச் சேர்ந்த வாசகர் ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் இப்படிப் பதறியிருந்தார். இதுகுறித்து விசாரித்தபோது வந்ததகவல்கள், ‘விழிப்புணர்வு மிகுந்த மக்கள் அதிகம் உள்ள கேரளத்திலா இப்படி நடந்து கொண்டார்கள்?’ என நம்மை வியக்கவைத்தது.
இரவு 11 மணிக்கு விபத்து
நெல்லை மாவட்டம், சமூகரெங்கபுரத்தை அடுத்த மேலூரை சேர்ந்தவர் முருகன். 34 வயதான இவர், கொல்லம் சுற்றுவட்டாரத்தில் மாடுகளில் பால் கறக்கும் தொழிலைச் செய்துவந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், இவரும் இவரது நண்பர் முத்துவும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்கள். இதில் படுகாயமடைந்த முருகனை சாத்தனூர் போலீஸார் கொட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள், நிலைமை சிக்கலாக இருப்பதாகச் சொல்லி வேறு மருத்துவமனைக்குக் கொண்டுபோகச் சொல்லிவிட்டார்கள்.
இதையடுத்து, தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆம்புலன்ஸ் மூலம் முருகனை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, முதலில் கொல்லத்தில் உள்ள மெடிட்ரினா என்ற தனியார் மருத்துவமனைக்கு முருகனைக் கொண்டு சென்றனர். அங்கிருந்தவர்களோ, ‘நரம்பியல் நிபுணர் இல்லை’ என்று சொல்லி வேறு மருத்துவமனைக்கு திருப்பிவிட்டார்கள். உடனே, அங்கிருந்து கொல்லம் மெடிசிட்டி மருத்துவமனைக்கு முருகன் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கும் சிகிச்சைக்கு மறுத்துவிட்ட நிலையில், அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தது ஆம்புலன்ஸ். அங்கோ, வென்டிலேட்டர் அனைத்தும் பயன்பாட்டில்இருப்பதாகச் சொல்லி திருப்பி அனுப்பினர்.
ஆம்புலன்ஸிலேயே அடங்கியது உயிர்
இதனால், போங்கமூடு பகுதியில் செயல்படும் எஸ்.யு.டி. ராயல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் முருகன். அங்கேயும் ‘நரம்பியல் நிபுணர் இல்லை’ என்று கைவிரித்தார்கள். இதனால், மீண்டும் 80 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, அதிகாலை 6 மணியளவில் கொல்லம் ஜில்லா அரசு மருத்துவமனைக்கு வந்தது ஆம்புலன்ஸ். ஆனால், அதற்குள்ளாக முருகனின் உயிர் ஆம்புலன்ஸுக்குள்ளேயே அடங்கிவிட்டது.
விபத்தில் சிக்கிய ஒரு மனிதருக்கு பணம் கட்ட வசதி இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சிகிச்சைஅளிக்க மறுத்து, 7 மணி நேரமாக அலைக் கழித்து உயிரை பறித்த சம்பவம் அறிவு ஜீவிகள் மாநிலம் என்று சொல்லப்படும் கேரளத்தை உலுக்கி உட்கார வைத்திருக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் அரசு இதை மானப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
உதவி செய்த தோழர்கள்
முருகனின் உடல் செவ்வாய் கிழமையன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்லக்கூட வசதியில்லாது நின்றது முருகனின் குடும்பம். கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகோபாலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் தலா பத்தாயிரம் ரூபாய் பண உதவி செய்தார்கள். வாலிபர் சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸிலேயே முருகனின் உடல் நெல்லை கொண்டுவரப்பட்டது.
மனித உரிமைகள் மதிக்கப்படும் கேரளத்தில் நடந்திருக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து கருத்து தெரிவித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, ’’விபத்தில் காயம்பட்டவர் யார், அவரால் பணம் செலுத்த முடியுமா, அவரை சிகிச்சைக்கு சேர்த்தவர் யார்? என்பது குறித்தெல்லாம் விசாரிக்காமல் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறைகள் கேரளத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது. எனவே, முருகன் விவகாரத்தில் இந்த விதிகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார். ”இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனும் வருத்தப்பட்டுள்ளார்.
மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 6 மருத்துவமனைகள் மீதும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. முருகனுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்கு மருத்துவமனைகள் சொன்ன காரணங்கள் உண்மைதானா என்கிற கோணத்தில் விசாரணைகள் நடக்கிறது. இதனிடையே, கேரள மனித உரிமை ஆணையமும் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. அதன் உறுப்பினர் மோகன்குமார், இவ்விவகாரம் குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை கேட்டுள்ளார்.
எந்த விசாரணையும் முருகனை மீண்டும் உயிரோடு கொண்டுவந்து நிறுத்தப்போவதில்லை. என்றாலும், இனிமேல் இப்படியொரு அவலம் நடக்காத வகையில் விசாரணையும் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைளும் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago