சூழல் சுற்றுலா பிரியர்களுக்காக பில்லூர் பரளிக்காட்டில் அமைகிறது மூலிகைப் பண்ணை

By கா.சு.வேலாயுதன்

சமீப காலமாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக உள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. கோவை மாவட்டம், காரமடையிலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் பில்லூர் அணையின் பின்புறம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைந்திருக்கிறது பரளிக்காடு.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சூழல் சுற்றுலாவை நடத்திக் கொண்டிருக்கிறது வனத்துறை. காரமடை வன அலுவலகத்தில் முன்கூட்டி கட்டணம் (ரூ.400) செலுத்தி பதிவு செய்துவிட்டு வரும் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்துச் செல்லும் பழங்குடியினர், வனப் பகுதியில் உள்ள யானை, மான், கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள், பறவைகள் என சுற்றிக் காண்பிக்கிறார்கள். மதியம், மாலை உணவு மற்றும் சிற்றுண்டிகளை பழங்குடியினர் தயாரித்து அளிக்கின்றனர்.

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு நாள் முழுக்க இயற்கைச் சூழலில் சுற்றுலா அனுபவம் கிடைப்பதால் ஏராளமான சுற்றுலாவாசிகள் இங்கே வருகின்றனர். இதே பகுதியில் ஒரு மாதம் முன்பு பூச்சமரத்தூர் காட்டேஜ் சூழல் சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளனர் வனத்துறையினர்.

மரக் குடில்கள்

பரளிக்காடு நீர்தேக்கப் பகுதிக்கு அப்பால் இருப்பது பூச்சமரத்தூர் மலைகிராமம். இதன் நீர்நிலையோரம், வனப் பகுதியில் 3 மரக் குடில்கள் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குடிலில் 8 பேர் தங்கலாம்.

காலை 10.30 மணிக்கு அறைக்குள் நுழைந்துவிட்டால் சுடச்சுட காய்கறி சூப் பரிமாறப்படுகிறது. பிறகு வனக் குழுவினர் அனைவரையும் மலைப் பயணத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். பயணம் முடிந்து அறைக்குத் திரும்பினால் சைவ, அசைவப் பிரியர்கள் இரு தரப்பினருக்கும் பிடித்தமான உணவுகள் வழங்கப்படுகின்றன. இது முடிந்து அறையிலேயே குட்டித்தூக்கம், அடுத்து பரிசல் பயணம்.

இரவில் மிருகங்களின் ஒலியை கேட்க முடிகிறது. சாளரம் வழியே காடுகளுக்குள் வனவிலங்குகள் நகர்வையும் காண முடிகிறது. அடுத்த நாள் காலை 9.30 மணிக்கெல்லாம் விடுதியை விட்டு புறப்படலாம். இதற்கு கட்டணமாக ரூ. 1500 வசூலிக்கிறார்கள்.

சோலார் மின்வசதி

ஆனால், இந்த குடில்களுக்கு பில்லூரிலிருந்து மின்கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு வரப்படுவதால் அடிக்கடி மின்தடை (காற்றுக்கு, மரங்கள் முறிந்து, மின்னல், மழை அடித்து..) ஏற்படுவதால் தங்குபவர்கள் அவஸ்தைக்குள்ளாக வேண்டியிருக்கிறது. எனவே தற்காலிகமாக காட்டேஜ் புக்கிங்கை நிறுத்திய வனத்துறை மாற்று ஏற்பாடாக சோலார் மின்சார அமைப்பை நிறுவ ஏற்பாடு செய்து வருகிறது. அந்தப் பணிகள் ஓரிரு வாரங்களில் முடிந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

அதே வேளையில் இந்த பூச்சமரத்தூர் காட்டேஜ் வளாகத்திலேயே மூலிகைப் பண்ணை ஒன்றை அமைக்கத் திட்டுமிட்டுள்ளது வனத்துறை.

இதுபற்றி கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, ‘சூழல் கெடாத சுற்றுலா, தங்கும் விடுதி ஏற்படுத்தும்போது மக்களிடம் அது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது மூலிகைகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது. பல வகை அரிய மூலிகைகள் அழிந்து வருகின்றன. அதை பாதுகாக்கும் நோக்கோடும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும் வல்லாரை, தூதுவளை உள்ளிட்ட பல்வேறு வகை மூலிகைகள் அடங்கிய செடிகள் வளர்ப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சுற்றுலா வந்து தங்கிச் செல்பவர்கள் அதை ரூ. 5, ரூ.10 என வாங்கி செல்லும் வகையில் அது இருக்கும்.

ஏற்கெனவே ஆழியாறு அருகே வனத்துறை சார்பில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூலிகைப் பண்ணை வெற்றிகரமாகச் செயல்படுகிறது. அதைப்போலவே இதுவும் அமையும். அதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளன’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்