குழந்தைகளை அச்சுறுத்தும் ஆட்டிசம் குறைபாடு, மன வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் பெற்றோருக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசத்தின் சவாலாய் நிற்கிறது. ‘எங்களுக்குப் பிறகு இவர்களை யார் எடுத்துக்கூட்டிப் பார்ப்பார்கள்?’ - இதுதான் இத்தகைய குறைபாடுகள் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் மனதை அழுந்திக் கொண்டிருக்கும் ஆழ்ந்த கவலை.
இந்தக் கவலைக்கு ஆறுதல் தருகிறார் மதுரையைச் சேர்ந்த சந்திரசேகர். தனது மகனைப் போல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய குழந்தைகளை பாதுகாக்க ‘மதுரை கூட்டு வாழ்வு பெற்றோர் அமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார் இவர். இதில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் 100 பேரின் பெற்றோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு, 10 உறுப்பினர் கொண்ட அறக்கட்டளையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்கா
சரி, இந்த அமைப்பு அப்படி என்ன செய்கிறது? மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காகவே முதல்கட்டமாக சிறப்புப் பூங்கா ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அமைப்பு. நல்ல நோக்கம் என்பதால், மதுரை - அழகர் கோயில் சாலையில் புதூர் தாமரைத்தொட்டி அருகே ஒரு பூங்காவையே இவர்களிடம் ஒப்படைத்திருக்கிறது மதுரை மாநகராட்சி.
மாநகராட்சி ரூ.15 லட்சம் ஒதுக்க, தமது பங்களிப்பாக 15 லட்சத்தையும் போட்டு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இந்தச் சிறப்புப் பூங்காவை உருவாக்கி இருக்கிறது மதுரை கூட்டு வாழ்வு பெற்றோர் அமைப்பு. இங்கு, ஆட்டிசம் பாதித்த மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், அவர்களுக்கான நவீன கழிவறை, இயற்கை உணவுக்கூடம், நூலகம், தகவல் மையம், உடல் இயக்க சவால் கொண்டோருக்கான நடைபாதை, சிறப்பு விளையாட்டுச் சாதனங்கள் இவற்றுடன், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கான ஆலோசனை மையத்தையும் அமைத்துள்ளனர்.
சிறப்பு இல்லம் கட்ட முயற்சி
அடுத்ததாக, இந்த அமைப்பில் உள்ள பெற்றோரில் யாராவது எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் அவர்களது குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, சிறப்பு இல்லம் ஒன்றை அமைக்கும் முயற்சியிலும் இவர்கள் இறங்கியுள்ளனர். இந்த முயற்சிக்கு மத்திய அரசும் உதவுவதாக உறுதியளித்துள்ளதாம்.
மனவளர்ச்சி குன்றிய தனது மகனைப்பற்றி மட்டும் சிந்திக்காமல் அதுபோலுள்ள மற்ற குழந்தைகளின் நலன் பற்றியும் சிந்தித்துச் செயல்படும் சந்திரசேகர், தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மூத்த மகன் சென்னையில் பொறியாளராக இருக்கிறார். தற்போது 23 வயதாகும் இளைய மகன்தான் மனவளர்ச்சி குன்றிய பிள்ளை. இந்த மகனின் நிலையைப் பார்த்தே கவலையில் உக்கி உருகிய சந்திரசேகரின் மனைவி, சில மாதங்களுக்கு முன்பு கண்ணை மூடினார். அந்தக் கவலையைத் தனக்குள்ளே விழுங்கிக்கொண்ட சந்திரசேகர், பெற்றோருக்குப் பிறகு சிறப்புக் குழந்தைகளைக் கவனிப்பதற்கான சிறப்பு இல்லத்தைக் கட்டும் முயற்சியில் தீவிரமாய் இருக்கிறார்.
பெற்றோருக்குப் பிறகு..
“பெற்றோர் நல்ல நிலையில் இருக்கும்வரை சிறப்பு நிலைக் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், அதற்குப் பிறகு அவர்களின் நிலை? இந்தக் குழந்தைகளை பராமரிப்பதற்காக உள்ள இல்லங்களில் பெரும்பாலானவை கட்டிப்போட்டு வளர்க்கும் கொட்டடிகளாகவே உள்ளன. இத்தகைய குழந்தைகளை செயற்கையாக அடக்கி, முடக்கி வைப்பது கொடுமையிலும் கொடுமை; அது வன்முறையும்கூட.
இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் என் போன்ற சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள், ‘எங்களுக்கு முன்னாடி எங்க குழந்தை போயிடணும்.’ என்று சாமியைக் கும்பிடுகிறார்கள். ஒருகட்டத்தில் எனக்கும் இத்தகைய கவலை இருந்தது உண்மை. ஆனால், இப்போது அந்தக் கவலை இல்லை.” என்று சொன்ன சந்திரசேகர் மேலும் பேசுகையில், “ஆரம்பத்துல இந்த பூங்கா கட்டவே ரொம்பச் சிரமப்பட்டேன். பெற்றோரை ஒருங்கிணைக்க முடியாமல் வெறுத்துப் போனேன். அந்தச் சூழலில்தான், மாநகராட்சிக்குச் சொந்தமான பெரும்பாலான பூங்காக்கள் பராமரிப்பின்றி இருப்பதை அறிந்தேன். உடனே, அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த சந்தீப் நந்தூரியைச் சந்தித்துப் பேசினோம். அவரும் எங்களது நோக்கத்தைப் புரிந்துகொண்டு பூங்காவையும் தந்து, 15 லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கினார்.
நம்பிக்கை வர ஆரம்பித்திருக்கிறது
எங்களால் ஒன்பது லட்சம் ரூபாய்க்கு மேல் திரட்ட முடியவில்லை. ஆனாலும் பணத்துக்காக இந்தத் திட்டத்தை கைவிடக்கூடாது என தீர்மானித்துக்கொண்ட நான், எனது சேமிப்பு 2 லட்சம், மனைவியின் நகைகள், எனது மூத்த மகன் கொடுத்த ஒன்றரை லட்சம் எல்லாவற்றையும் சேர்த்துப்போட்டு பூங்கா வேலையை பூர்த்திசெய்தேன். எங்கள் அமைப்பிலுள்ள சிலருக்கே இப்போதுதான் நம்பிக்கை வர ஆரம்பித்திருக்கிறது.
இந்தப் பூங்காதான் இப்போது நாங்கள் எங்கள் குழந்தைகளோடு கூடும் இடம். இதேபோல் சிறப்பு இல்லமும் சீக்கிரமே அமையும். எங்களில் ஒருவர் காலமாகிவிட்டால் அவர்களது குழந்தையை, அமைப்பின் மற்ற அனைவரும் சேர்ந்து கவனித்துக்கொள்வார்கள். எங்களுக்குப் பிறகும் இங்கே எங்கள் குழந்தைகள் நல்லபடியாக இருப்பார்கள்” என்று சொன்னார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago