காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் ஓராண்டுக்கு பாலாற்றில் மணல் அள்ள தடை நீட்டிப்பு: போராட்டத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளுவதற்கான தடையை, மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு, ஓங்கூர் ஆறு, கிளியாறு ஆகியவை ஓடுகின்றன. இதில் பாலாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. பாலாற்று படுகையில், விவசாயமும் செழித்திருந்த நிலையில், விதிகளை மீறி மணல் அள்ளியதால், ஆறு கட்டாந்தரையாகி விட்டது. மணல் எடுப்பதை தடுக்க, ஆற்றங்கரையோர மக்கள், பல போராட்டங்களை நடத்தினர்.

மேலும், பூந்தமல்லி வட்டார ஆற்று மணல் லாரி உரிமையாளர் கள் சங்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் 2013-ல் அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சித்திரசேனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் மணல் கடத்தல் தொடர்ந்தது. இதையடுத்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாற்றில் மணல் அள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்ததும் குவாரி அமைத்து மீண்டும் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவுடன் மணல் அள்ள விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நிறைவு பெற்றது. இந்நிலையில் மணல் அள்ளுவதற்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகம் அறிவித்தார். இதனால் தடை விலக்கப்பட்டு மீண்டும் மணல் அள்ள வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த லாரி உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் கூறும்போது, ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்ககோரி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து நேற்று மனு அளித்தோம். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மணல் அள்ள தடை தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவால் நாங்கள் அதிருப்தியடைந்துள்ளோம்.

மேலும், மணல் தொடர்பான வழக்கில் தொடர்புடையதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீண்டும் வேறு துறையில் பணியமர்த்தப்பட் டுள்ளார். அதில் சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறையினரும் பணிக்கு திரும்பியுள்ளனர் .ஆனால், மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடை மட்டும் நீட்டிக்கப்படுவது ஏற்புடையது அல்ல. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணல் தட்டுபாடு ஏற்பட்டு, கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதோடு, பாலாற்றில் மணல் கடத்தல் அதிகரிக்கும் நிலை உள்ளது.

அதனால், மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக்கோரி சென்னை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE