முட்டை கொள்முதல் ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: மதுரையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

முட்டை கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது: தொழிலாளர் நலன் சார்ந்த 14 சட்டங்களை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். ஆனால், தற்போது நிறுவனங்களுக்குச் சென்று தொழிற்சாலை ஆய்வாளர் ஆய்வு செய்யக்கூடாது என்னும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் இந்த சட்டத்தை ஆதரித்துள்ளன. இதுபோல, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிறைய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் வரும் 5-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33,000 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள பாஜக அரசு, தற்போது 645 கிராமப்புற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமப்புற வேலையை 2015-ம் ஆண்டில் 200 ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தில் 384 ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் ஊரக வேலைவாய்ப்பு திட்டமானது 198 ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவுக் கூடங்களுக்காக நாள் ஒன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் அனைத்தையும் ஒருவரிடமிருந்தே அரசு கொள்முதல் செய்கிறது. பண்ணை உற்பத்தியாளருக்கு முட்டை ஒன்றுக்கு ரூ.4.50-ஐ அரசு வழங்குகிறது. ஆனால், ரூ.3.15 மட்டுமே பண்ணை உரிமையாளருக்கு போய் சேருகிறது. இதனால், இந்த முட்டை கொள்முதலில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேட்டை விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

மதுரையில் நடைபெற்றுள்ள கிரானைட் கொள்ளை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மணல், தாதுமணல், கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் குழுவுக்கான அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும்.

காவிரி அணையின் நடுவில் தடுப்பணை கட்டினால் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, அங்கு நடைபெறும் விவசாயிகளின் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE