நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் காண்பிக்காவிட்டால் உடனடியாக புழல் சிறையில் மூன்று மாதம் அடைக்கப்படுவீர்கள் என்கிற அளவிற்கு போலீஸாரின் அறிவிப்பால் பொதுமக்கள் மிரண்டு போயுள்ளனர்.
அசல் ஓட்டுநர் உரிமம் தான் வைத்திருக்க வேண்டுமா? இதற்கு மாற்று எதுவும் இல்லையா என்ற கேள்வியை இணையதள பயன்பாட்டில் இருக்கும் செயலி வடிமைப்பாளர் கோகுல் விஸ்வேஷ்வரிடன் கேட்டோம். அதற்கு அவர் பதிலளித்துப் பேசியதாவது:
இது போன்ற சட்டங்கள் அப்பாவி மக்களை வாட்டி எடுக்கும், ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்கும் போது தொலைந்து விட்டால் அதன் பின்னர் அதற்காக ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து அதன் பின்னர் ரசீது வாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்று லைசென்ஸ் பெறுவதற்கு 20 நாட்கள் வரை ஆகிவிடும்.
அதுவரை நான் அலுவலகத்துக்கு எதில் செல்வது. நடைமுறைக்கு ஒத்துவராத சட்டம் இது. அதற்காக அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறோம். ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் அசல் ஆவணங்களை கையில் வைத்துக்கொள்ளாமலே சிறிய செயலி மூலமே நமது பாக்கெட்டில் அத்தனை அசல் ஆவணங்களையும் பராமரிக்கலாம். அதற்கான வழிமுறைகள் இருக்கும் போது இப்படி ஏன் பொதுமக்களை வாட்டி வதைக்க வேண்டும்.
அது என்ன வழி முறை?
நமது மத்திய அரசும், மத்திய போக்குவரத்து துறையும் இணைந்து ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் டிஜிட்டல் லாக்கர் சுருக்கமாக டிஜிலாக்கர் என்பார்கள். இதில் நமது அசல் ஆவணங்களை பதிவேற்றிக் கொள்ளலாம். இதை நம்மை சோதிக்கும் அதிகாரி கேட்கும்போது நமது செல்போன் மூலமாகவே காட்டலாம். மிகவும் எளிய முறை இதை ஏன் தமிழக அரசு பரிசீலிக்க மறுக்கிறது.
இந்த டிஜிலாக்கர் பயன்பாட்டில் இதுவரை இந்தியா முழுதும் 80 லட்சம் பேர் இணைந்துள்ளனர். தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதில் உள்ள ஆவணங்கள் அசல் தான் என்பதை எப்படி சோதிக்கும் அதிகாரி நம்புவது?
இது மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா மூலம் உருவாக்கப்பட்ட செயலி. மத்திய அரசின் செயலி என்பதால் பாதுகாப்பு மிக்கது. இதில் ஏற்றப்படும் ஆவணங்களை மத்திய அரசால் அங்கீகரிப்படுவதாகும். கூகுள் கிளவுடில் பதிவேற்றப்படும் ஆவணங்களுக்கு அரசு அங்கீகாரம் கிடையாது. ஆனால் டிஜிலாக்கருக்கு அங்கீகாரம் உண்டு.
எளிதாக உங்களுடைய ஆதார் எண் மூலம் இதில் பதிவு செய்து உங்கள் அசல் ஆவணங்களை பதிவேற்றலாம். இதை எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஆதார் எண் மூலமாக உங்கள் செல்போனுக்கு வரும் ஒரு முறை மட்டுமே பயன் படுத்தும் திறப்பு எண் மூலம் மட்டுமே திறந்து பார்க்க முடியும். வேறு யாரும் அதைப் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பானது.
மேலும் இந்த செயலியில் மத்திய போக்குவரத்து அமைச்சகத்தால் ஓட்டுநர் உரிமத்தை பதிவேற்ற தனி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை பதிவேற்றி அதை அதிகாரிக்கு காண்பிக்கலாம்.
வேறு எளிதான முறைகள் எதுவும் உண்டா?
இதைவிட எளிதான முறையும் உண்டு, விரல் ரேகை முறை. உதாரணமாக நீங்கள் இப்போதைய கால கட்டத்தில் செல்போன் சிம் கார்டு வாங்கச் சென்றால் அவர்கள் உங்களிடம் எந்த ஆவணத்தையும் கேட்பதில்லை. உங்கள் விரல் ரேகையும், ஆதார் எண்ணையும் பெற்று உடனே சிம் கார்டை தருகின்றனர்.. அதற்கு காரணம் உங்கள் வீட்டு முகவரி, புகைப்படம் உள்ளிட்ட சிம் கார்டு அளிப்பதற்கான விபரங்களை ஆதார் மூலம் அவர்கள் பெறுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டால் போக்குவரத்து காவலர் வாகன ஓட்டியை சோதிக்கும் போது ஆதார் எண்ணை அளித்து விரல் ரேகையை அதற்கென உள்ள ஸ்கேனிங் கருவியில் வைத்தால் நொடியில் ஓட்டுநர் உரிமம் உள்ளதா? என்ன நிலையில் உள்ளது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தந்துவிடும்.
இதற்கு அதிக செலவும் இல்லை. அதிகபட்சம் இந்த கருவி ரூ.2000 க்குள் தான் இருக்கும். போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்க புதிய வகை கருவி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை சோதிக்க நவீன கருவிகள் வழங்கும் போது ஓட்டுநர் உரிமத்தை சோதிக்க இது போன்ற கருவி வழங்கலாம்.
ஆகவே தேவையற்ற சுமையை பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் மீது ஏற்றுவதை விட அரசே நவீன முறைகளை கையாள வேண்டும். சாதாரண செல்போன் நிறுவனங்களே நவீன முறையில் செயல்படும் போது அரசால் முடியாதது ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago