பு
துச்சேரியில் உள்ள ஃபிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனம் தமிழகத்து கோயில் சிலைகள் குறித்த போட்டோ ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளது. இதை தங்களிடம் ஒப்படைக்கும்படி தமிழக இந்து சமய அறநிலையத்துறை உரிமை கோரி இருப்பது சர்ச்சையாகி வருகிறது.
புதுச்சேரியில் ஃபிரெஞ்சு அரசின் நிதியுதவியில் புதுச்சேரி ஃபிரெஞ்சு இன்ஸ்டிடியூட் (ஐ.எஃப்.பி.) செயல்பட்டு வருகிறது. இங்கு, கோயில் சிலைகள், கோயில்களில் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள், கோயில் நகைகள் உள்ளிட்டவற்றைஒளிப்படங்களாக எடுத்து, அவற்றை டிஜிட்டல் மயப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதில்லாமல், பழங்காலத்து ஓலைச் சுவடிகளையும் இங்கே தனியாக நூலகம் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். இதனால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு அரிய பொக்கிஷமாக இருந்து வழிகாட்டி வருகிறது இந்த இன்ஸ்டிடியூட்.
மொத்தம் 1,35,629 படங்கள்
தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, பிஹார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம், ஒடிசா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள கோயில் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஒளிப்படங் களாகச் சேகரித்து வைத்திருக்கும் ஐ.எஃப்.பி., இந்தோனேசியாவைச் சேர்ந்த சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களையும் ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தி இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாகச் சேகரிக்கப்பட்ட இந்த ஆவணத் தொகுப்பில் இந்திய கோயில் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களின் படங்கள் மட்டுமே 1,35,629 உள்ளது. 641 இமேஜ்கள் இந்தோனேசியா சம்பந்தப்பட்டவை. இதில் தமிழக கோயில் சிலைகள், கோயில் ஓவியங்களின் ஒளிப்படங்கள் மட்டுமே 86,057.
1956-லிருந்து இதுவரை 2,500 ஊர்களுக்குப் பயணித்து சுமார் 4000 இடங்களில் உள்ள கோயில் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை படமெடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறது ஐ.எஃப்.பி. தமிழக கோயில்களிலிருந்து பழமையான ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் பல கட்டங்களாகக் கடத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடத்தப்படும் சிலைகள் இன்ன கோயிலுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க தமிழக அறநிலையத் துறையிடம் பல நேரங்களில் உரிய ஆவணங்கள் இருப்பதில்லை.
கொல்லூர் மூகாம்பிகை நகைகள்
கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் பிடிபடும்போது, அவை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்ய இன்றுவரை ஐ.எஃப்.பி. ஆவணங்களே உதவி வருகின்றன. ‘இன்டர்போல்’ போலீஸாரும் இவர்கள் தரும் ஆவணத்தைத்தான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் கொல்லூர் முகாம்பிகை (எம்.ஜி.ஆர். தங்கவேல் காணிக்கை அளித்த கோயில்) கோயிலின் அசல் நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளைச் செய்துவைத்தார்கள். இந்தக் கள்ளத்தனத்தை வெளிக்கொண்டுவர பெரிதும் உதவியது ஐ.எஃப்.பி-யின் போட்டோ ஆவணங்களே!
ஆன்லைனில் ஆவணங்கள்
இந்த நிலையில், தங்களிடம் உள்ள கோயில் சிலைகள், ஓவியங்கள் சம்பந்தப்பட்ட ஒளிப்படங்கள் அனைத்தையும் அண்மையில் ஆன்லைனில் போட்டோ லைப்ரரியாக பதிவேற்றம் செய்திருக்கிறது ஐ.எஃப்.பி. இதுதான் இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து அறநிலையத் துறை வட்டாரத்தில் நம்மிடம் பேசியவர்கள், “கோயில் சிலைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்பட வேண்டியவை. இவற்றை ஆன்லைனில் பகிரங்கப்படுத்தினால், எந்த சிலை எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் சிலைக்கடத்தல் கும்பல்கள், போலிகளைச் செய்துவைத்துவிட்டு அசல் சிலைகளைக் கடத்திவிட வாய்ப்பிருக்கிறது. நகைகளையும் திருட வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக, ஐ.எஃப்.பி. நிர்வாகத்தை 17-ம் தேதி சென்னை அழைத்திருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.எஃப்.பி. தரப்பில் நாம் விசாரித்தபோது, “கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எங்களது ஊழிர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து, கோயில் சிலைகளையும் ஓவியங்களையும் படம்பிடித்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசோ, தமிழக அரசோ எங்களுக்கு எந்த உதவியும் அளிக்கவில்லை. கோயில்களில் படம் பிடிப்பதற்கான அனுமதியைக்கூட இழுத்தடித்துத்தான் கொடுப்பார்கள். அதேசமயம், கோயில் சிலைகளை ஆவணப்படுத்தும்போது அதன் நகல் ஆவணம் ஒன்றை சி.டி. வடிவில் அவ்வப்போது இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பியும் வருகிறோம். அதையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டு இப்போது, ‘நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் அனைத்தும் எங்கள் சொத்து. அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என கெடுவைப்பதுடன், கோயில் சிலைகளின் படங்களை ஆன்லைனில் ஏற்றியதையும் கேள்வி கேட்கிறார்கள்.
37.50 லட்சம் தந்தால்..
எங்களிடம் இருக்கும் ஆவணங்களை நாங்கள் ஒப்படைக்கத் தயார். ஆனால், அதை இலவசமாகத் தரமுடியாது. ‘மொத்தம் உள்ள 86,057 படங்களில், தேர்வுசெய்யப்பட்ட 50 ஆயிரம் படங்களைத் தந்துவிடுகிறோம். ஆனால், அதற்கான செலவு தொகையாக 37.50 லட்ச ரூபாயை நீங்கள் தரவேண்டும்’ என தமிழக அறநிலையத் துறைக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினோம். அதற்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை.” என்று சொன்னார்கள்.
இதுகுறித்து ஐ.எஃப்.பி. இயக்குநரின் தனிச் செயலாளர் விசாலாட்சியிடம் கேட்டபோது, “போட்டோ ஆவணங்கள் தொடர்பாக பேச தமிழக அறநிலையத் துறை ஆணையர் எங்களை அழைத்திருப்பது உண்மைதான். முழுக்க முழுக்க கல்வி, மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே போட்டோக்களை ஆன்லைனில் ஏற்றி இருக்கிறோம். இதில் வேறெந்த வியாபார நோக்கமும் எங்களுக்கில்லை. எனினும், பேச்சுவார்த்தையில் ஆணையர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு, இன்ஸ்டிடியூட் விரிவாகப் பதிலளிக்கும்”என்றார்.
விவகாரம் எங்குபோய் முட்டப்போகிறதோ தெரியவில்லை!
படங்கள் உதவி: IFP-புதுச்சேரி
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago