காவல் ஆய்வாளரை கத்தியால் குத்தி ஜீப் கடத்தல்: துரத்திப் பிடித்த போலீஸார்

வாலாஜா சுங்கச்சாவடி அருகே காவல் ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு போலீஸ் ஜீப்பை இளைஞர் கடத்திச் சென்றார். சுமார் 4 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேலூர் அருகே அந்த வாலிபரை சினிமா பாணியில் போலீஸார் துரத்திப் பிடித்தனர்.

ராணிப்பேட்டை போக்கு வரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன், நேற்று முன்தினம் இரவு வாலாஜா சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு வாகன ஆட்டோவை நிறுத்தி ஆய்வாளர் சோதனையிட்டார்.

அப்போது, அந்த ஆட்டோவின் ஓட்டுநர், சுங்கச்சாவடி அருகே உள்ள டீ கடையில் நின்றிருந்த இளைஞரை சுட்டிக்காட்டி ‘சார்... அந்த பையன் பொய்கை அருகே போலீஸ் எனக்கூறி என்னிடம் ரூ.100 வாங்கினான்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆய்வாளர் சீதாராமன் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தார். அவரது இருசக்கர வாகனத்தின் முன்புறம், பின்புறம் இருந்த நம்பர் பிளேட்டில் வேறு வேறு எண்கள் இருந்தது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த ஆய்வாளர், அந்த இளைஞரைப் பிடித்து தனது ஜீப்பின் பின்பக்க இருக்கையில் உட்கார வைத்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஷூவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆய்வாளரின் தோள்பட்டை மற்றும் தலையில் அந்த இளைஞர் கத்தியால் குத்தினார். இதில், நிலைகுலைந்த ஆய்வாளர் கூச்சலிடவே அருகில் இருந்த போலீஸார் ஓடிவந்தனர். அதற்குள் அந்த இளைஞர் ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்து ஜீப்பை ஓட்டிக்கொண்டு தப்பினார்.

ஆய்வாளரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீஸ் ஜீப்பை திருடிக்கொண்டு இளைஞர் தப்பிய தகவல் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை யடுத்து, வாகனத் தணிக்கை முடுக்கிவிடப்பட்டது.

சுமார் 4 மணி நேரம் இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணியளவில் கடத்தப்பட்ட போலீஸ் ஜீப் வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் கிராமம் நோக்கிச்செல்வது தெரியவந்தது.

வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீஸார் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தினர். அப்துல்லாபுரம் பகுதியில் இருந்து ஊசூர் நோக்கிச் சென்ற அந்த ஜீப்பை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

ஜீ்ப்பில் இருந்து இறங்கி தப்பி ஓடிய அந்த இளைஞரை ஆய்வாளர் ராமச்சந்திரன் விரட்டிப் பிடித்தார்.

விசாரணையில் அவர் வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஆல்பிரட் ஜான் பால் என்று தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE