மனிதனைக்காட்டிலும் ஓர் அறிவு குறைவுதான் என்றாலும் பழகிவிட்டால் பாசம் வைப்பதிலும் விசுவாசம் காட்டுவதிலும் மனிதனை மிஞ்சிவிடுகின்றன விலங்குகள். அதற்கு உதாரணம் நெகிழ்வான இந்தச் சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம். இரண்டு மாதங்களுக்கு முன், இங்குள்ள அய்யூர் என்ற கிராமப் பகுதியில், தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று உடம்பில் காயங்களுடன் சுற்றித் திரிந்தது. விஷயமறிந்து அங்கு வந்த வனத்துறையினர், குட்டி யானையை மீட்டு தங்கள் பராமரிப்பில் வைத்தனர். யானை உள்ளிட்ட பெரிய விலங்குகளை பராமரித்து அவ்வளவாய் பழக்கமில்லாத வனத்துறையினர், அந்தக் குட்டி யானையைப் பராமரிக்க முதுமலை புலிகள் சரணாலயத்திலிருந்து பொம்மன் என்ற பாகனை வரவழைத்தனர்.
அந்நியோன்யமாகிப் போனது
இதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒருமாத காலம் தேன்கனிக்கோட்டையிலேயே தங்கியிருந்து அந்தக் குட்டி யானையை பராமரித்த பொம்மன், அதன் உடம்பிலிருந்த காயங்களையும் ஓரளவுக்கு குணப்படுத்தினார். அதேசமயம், அந்த ஒருமாத காலத்தில் பொம்மனிடம் ரொம்பவே அந்நியோன்யமாகிப் போனது குட்டி யானை. பொம்மனும் அதை ஒரு பிள்ளையைப் போல கவனித்துக் கொண்டார். ஓரளவுக்கு குட்டி யானை சகஜமானதும் பொம்மன் முதுமலைக்கு திரும்பிவிட்டார்.
அவர் வந்த பிறகு குட்டியானை அங்கு என்ன ரகளை கட்டியதோ தெரியவில்லை. குட்டி யானையை வண்டியில் ஏற்றி முதுமலை புலிகள் சரணாலயத்தில் பொம்மனிடமே கொண்டு வந்துவிட்டுச் சென்று விட் டார்கள் வனத்துறையினர். முதுமலையில், பொம்மனைப் பார்த்ததும் பழையபடி அவரிடம் கொஞ்சி விளையாட ஆரம்பித்தது குட்டி யானை. கடந்த வாரத்தில் ஒரு நாள், புல் தரையில் அதனுடன் விளையாடிவிட்டு அங்கேயே சற்று அயர்ந்துவிட்டார் பொம்மன். அவரைவிட்டு வேறு எங்கும் போகாத குட்டி யானை, தாயின் அரவணைப்பில் கிடக்கும் குழந்தையைப் போல, பொம்மன் அருகிலேயே போய் படுத்துக்கொண்டது.
நெகிழ்ந்து போனேன்
பலரும் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்ல, புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவர் விஜயராகவன் அந்தக் காட்சியை அப்படியே படம்பிடித்தார். அதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “மனிதர்களில் பலர் தங்களது சுயநலத்துக்காக, பாசம் வைப்பதுபோல் வேஷம்போடுகிறார்கள். ஆனால், பிறந்து 11 மாதங்களே ஆன ஒரு யானைக் குட்டியானது, ஒருமாத காலமே தன்னைக் கவனித்துக் கொண்ட பாகனிடம் எவ்வளவு உண்மையான பாசம் வைத்திருக்கிறது. உண்மையிலேயே அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்து போய்த்தான் படம் பிடித்தேன்” என்றார்.
குட்டி யானையுடன் விளையாடிக் கொண்டிருந்த பொம்மன், “முப்பது வருசமா முதுமலை சரணாலயத்துல வேலை செய்யுறேன். என் பொஞ்சாதியு்ம் என்கூடவே இங்க இருக்காங்க. எங்களுக்கு இந்தக் காடுதான் கடவுள். அதனால, நாங்க இங்கிருக்கிற மிருகங்களையும் பாசத்தோட நேசிக்கிறோம். இந்த யானைக் குட்டியை எங்களோட வளர்ப்புப் பிள்ளை மாதிரித்தான் நானும் என் பொஞ்சாதியும் பாத்துக்குறோம். கண்ணுல பார்த்துருச்சுனா என்னைய அங்க இங்க நகர விடாது. நான் எங்க போனாலும் என் பின்னாடியே பச்சப்புள்ள மாதிரி வரும். டாக்டர் படம்பிடிச்ச அன்னைக்கும் அப்படித்தான். புல் தரையில படுத்து நான் கொஞ்சம் அசந்துட்டேன். இதுவும் கூடவே வந்து படுத்துருச்சு” என்று சொன்னார்.
பெரும்பாலும் யானைக் குட்டிகள், தாய் அல்லது பாட்டியின் பாசப்பிணைப்பில்தான் வளரும். இந்தக் குட்டி யானைக்கு பக்கத்தில் இப்போது தாயும் இல்லை; பாட்டியும் இல்லை. ஆனால், தாயுமானவனாய் பொம்மன் இருக்கிறார்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago