ஓட்டப்பிடாரம் அருகே நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் ,ஓட்டப்பிடாரம் அருகே போர்க்களக் காட்சியை சித்தரிக்கும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், விலங்குகளுடன் சண்டையிடுதல் மற்றும் அரசனின் வெற்றிக்காக போரிடுதலின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்க காலம் முதல் தமிழர்களிடையே காணப்படும் வழக்கம்.

தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் நடுகற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்திலும் தமிழ்நாட்டில் நடுகல் வழிபாடு இருந்து வந்துள்ளது.

நாயக்கர் கால நடுகல்

பேராசிரியையும், தொல்லியல் ஆய்வாளருமான பிரியா கிருஷ்ணன் மற்றும் தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோர், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள முறம்பன் கிராமத்தில் உள்ள குளத்தின் வடக்குப் பகுதியில் நடத்திய கள ஆய்வின் போது போர்க்களக்காட்சியை சித்தரிக்கும் நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பிரியா கிருஷ்ணன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பண்டையக் காலத்தில் வீரமரணம் அடைந்த அரசர்களுக்கும், வீரர்களுக்கும் நடுகல் வைக்கும் வழக்கம் இருந்து வந்தது. செவ்வியல் அழகோடு மிக நேர்த்தியான போர்க்களக் காட்சி அமைக்கப்பட்டுள்ள இந்த நடுகல்லில் கர்நாடகத்தில் உள்ள நடுகல்லைப் போல் நுணுக்கமான வேலைப்பாடு காணப்படுகிறது. இதிலுள்ள சிற்பம் நாயக்கர் கால கலைப்பாணியை ஒத்துள்ளது. இந்த நடுகல் கி.பி. 16 அல்லது கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

போர்க்களக்காட்சி

நடுகல்லின் மையப் பகுதியில் அரசன் குதிரை மீது அமர்ந்து போரிடுவது போலவும், அவனை எதிர்க்கும் வீரன் கையில் கேடயமும், வாளும் கொண்டு போரிடுவது போலவும், போர்க்களத்தில் குதிரைகள், வீரர்கள் வீழ்வது போலவும் காட்சிப்படுத்தியுள்ளனர். எனவே, போர்க்களத்தில் வீரமரணமடைந்த அரசனுக்கு வைத்த நடுகல்லாக இதைக் கருதலாம். மேலும், நடுகல்லின் மேற்புறத்தில் வீரமரணம் எய்திய அரசனை தேவலோகப் பெண்கள் மாலையிட்டு அழைத்துச் செல்வது போலவும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

குலதெய்வமாக வழிபாடு

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நடுகல்லை சோலைராஜா என்ற பெயரில் நாயக்கர் சமுதாயத்தினர் இன்றும் தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டாலும், ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று இங்கு வந்து விழா எடுப்பதாக இவ்வூர் மக்கள் தெரிவித்தனர். பண்டைய கால நினைவுச் சின்னங்களை அரசு பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்