திருந்தி வாழப்போவதாக அறிவித்து திருடிய 93 பவுன் நகைகளை திருப்பிக் கொடுத்த திருடன்

திருந்தி வாழப்போவதாக அறிவித்து பல இடங்களில் திருடிய 93 பவுன் நகைகளை திருப்பிக் கொடுத்து, சரணடைந்த நபரை போலீஸார் பாராட்டினர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை முனுசாமி தோட்டம் பகுதியில் வசிப்பவர் முத்துசாமி(54). ரயில்வே ஊழியர். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், கடந்த 18-ம் தேதி வீட்டுக்குள் புகுந்த திருடன், பீரோவில் வைத்திருந்த 74 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 19-ம் தேதி மாதவரம் காவல் நிலையம் வந்த ஒரு இளைஞர், ராயபுரத்தில் ஒரு வீட்டில் நகைகளை திருடியது தான்தான் எனக்கூறி சரண் அடைந்திருக்கிறார். முதலில் இதை நம்ப மறுத்த போலீஸார், ராயபுரம் காவல் நிலையத்தில் விசாரித்தனர். திருட்டு நடந்ததையும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதையும் தெரிந்து கொண்டனர். பின்னர் அந்த நபரை ராயபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில், அவரது பெயர் பாபு(31), துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. பல இடங்களில் திருடிய 93 பவுன் நகைகளை போலீஸில் பாபு ஒப்படைத்தார். பாபுவை கைது செய்த போலீஸார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். பாபுவை பாராட்டிய போலீஸார், சிறையில் இருந்து வெளியே வந்ததும், அவரது அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு முழு உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். பாபு மீது மாதவரம், மயிலாப்பூர், ராயபுரம் காவல் நிலையங்களில் 6 திருட்டு வழக்குகள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE