அதிகரிக்கும் மின் தேவை அரசுக்கு சவாலாக உள்ளது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

அதிகரிக்கும் மின் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தி செய்வது அரசுக்கு சவாலாக உள்ளது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கூறினார்.

எரிசக்தி சேமிப்பு குறித்த தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டியை பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சென்னையில் நடத்தியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த இதன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:

முன்பு ஒரு ஆண்டுக்கு 2 - 3 சதவீதம் அதிகரித்த மின் தேவை, தற்போது 8 - 9 சதவீதம் அதிகரிக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவையாக மின்சாரம் மாறிவிட்டது. அதிகரித்து வரும் மின்சாரத் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்வது அரசுக்கு சவாலாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 2,792 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் இதுவரை 1,999 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 4000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். ஒரு யூனிட் மின்சார உற்பத்தியின் அடக்க விலை ரூ.6.89. ஆனால் இதற்காக ரூ.4.86 மட்டுமே பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த விலையில், ஒரு ஆண்டுக்கு 270 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் ஒரு யூனிட் மின்சாரத்தை சேமித்தால், அது ஒரு யூனிட் உற்பத்தி செய்ததற்கு சமமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில அளவில் நடந்த ஓவியப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் 26 பேர் பரிசு பெற்றனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் டெல்லியில் டிசம்பர் 12-ம் தேதி நடக்கவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல் பரிசு பெற்ற சென்னை சின்மயா வித்யாலயா பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவன் எ.யோகரன் இதுபற்றி கூறும்போது, “மின்சார சேமிப்பு வழிமுறைகள் பற்றி ஒரு குழந்தை விளக்குவது போல இந்தப் போட்டியில் படம் வரைந்திருந்தேன். தேசிய அளவிலான போட்டியிலும் பரிசு பெற விரும்புகிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், பவர் கிரிட் கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநர் என்.ரவிக்குமார், தமிழக தலைமை மின் ஆய்வாளர் எஸ்.அப்பாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 4000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். ஒரு யூனிட் மின்சார உற்பத்தியின் அடக்க விலை ரூ.6.89. ஆனால் இதற்காக ரூ.4.86 மட்டுமே பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE