போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க அரசின் ஸ்மார்ட் கார்டு திட்டம் தயார்: ஆதார் பதிவில் முன்னணியில் உள்ள அரியலூர், பெரம்பலூருக்கு முன்னுரிமை

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில் முதற் கட்டமாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் 1.96 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இவற்றில் சுமார் 25 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருக்கும் என அரசுக்குத் தெரியவந்துள்ளது.

போலி கார்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள், கணினியில் பதிவு செய்யப்படாமல், காகித வடிவிலேயே உள்ளன. இதனால் போலி கார்டுகளை அரசால் நீக்க முடியவில்லை. இதனால் உணவுப் பொருட்கள் மற்றும் அதற்கான மானியச் செலவால் அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கு மற்றும் ஆதார் அட்டை திட்ட விவரங்கள் மூலம் ஸ்மார்ட் கார்டு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஆதார் அட்டைக்கான விவரங்கள் 90 சதவீதம் வரை பதிவாகியுள்ளன. எனவே, இந்த இரு மாவட்டங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல், வருவாய் மற்றும் எல்காட் அதிகாரிகள் கூறியதாவது:

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த விவரங்களை வீடு, வீடாக வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் குறுக்கு ஆய்வு நடத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் கார்டு திட்டத்தில், பழைய ரேஷன் கார்டுகளுக்கான எந்த விவரங்களும் எடுத்துக் கொள்ளப்படாது. அவற்றை எடுத்தால் மீண்டும் போலி அட்டைகள் வர வாய்ப்புள்ளது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும், தாலுகா வாரியாக ஆதார் அட்டைக்கான பதிவை விரைவுபடுத்த, நிரந்தர மையங்கள் ஏற்படுத்துமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ரேஷன் கார்டு இணைப்புத் தாள் முடியும் நிலையில், வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில், 2016 வரையிலான 2 ஆண்டுக்கான உள்தாள் இணைக்கப்படும். அதேநேரம், 2016 தொடக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார் பதிவில் பின் தங்கியுள்ள சென்னை

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, ஆதார் அட்டைப் பதிவில் சென்னை பின் தங்கியுள்ளது. சுமார் 75 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் அட்டை பெற்றுள்ளனர். மற்றவர்கள் இன்னும் பதிவதற்கு முன்வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பெரும்பாலோர் ஆதார் அட்டை பதிவதற்கு முன் வரவில்லை. இதனால் முழுமையான விவரங்கள் இன்றி ஸ்மார்ட் ரேஷன் அட்டைக்கான பணிகள் தாமதமாகின்றன. எனவே, இனி வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஆதார் அட்டை சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE