சிறுவர்கள் இருவர் உட்பட 14 தமிழக மீனவர்களுக்கு டிச.5 வரை நீதிமன்றக் காவல்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கு டிசம்பர் 5 வரையிலும் நீதிமன்ற காவலில் வைக்க அந்நாட்டு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகுடன் 4 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சார்ந்த 2 விசைப்படகு 10 மீனவர்கள் என மொத்தம் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடித்தனர். இதில் தினேஸ்குமார் (14) நவின் (17) என்கிற இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர், ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்களை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி, 14 பேரையும் டிசம்பர் 5-ம் தேதி வரையிலும் காவலில் வைக்க உத்திரவிட்டார்.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் 'நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பு' அமைப்பாளர் அருளானந்தம் கூறும்போது, ''இலங்கை உயர் நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தங்கச்சிமடம் மீனவர்கள் தாயகம் திரும்பி இரண்டு தினங்கள்கூட ஆகாத நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட செயலாகத் தெரிகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கையாள்வதைப் போலவே இந்திய எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களை இந்திய கடற்படையினர் கடுமையாக கையாள வேண்டும்" என்றார்.

சிறைப்பிடிக்கப்பட்ட தினேஸ்குமார் மற்றும் நவின் இரண்டு மீனவச் சிறுவர்களை சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பாமல், சக மீனவர்களுடன் யாழ்ப்பாணம் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தமிழக மீனவர்கள் 24 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE