குற்றப் பின்னணி கொண்டவர்களை வழக்கறிஞர்களாக பதிவுசெய்ய தடை விதிப்பது உட்பட வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தனி நீதிபதி பிறப்பித்த 10 வழிகாட்டுதல்களை உறுதிசெய்து 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை பின்பற்றி வழக்கறிஞர்கள் சட்டம், இந்திய பார் கவுன்சில் விதியில் 6 மாதங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்களை வழக்கறிஞர்களாக பதிய தடை விதிக்கக் கோரி சிவகாசி வழக்கறிஞர் எஸ்.எம். ஆனந்தமுருகன் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், சட்டக்கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு24 ஏ ல் திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
அல்லது குற்ற வழக்குகள் கொண்டவர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் சட்டத்தொழிலுக்கு வர தடை விதித்து புதிய சட்டம் கொண்டுவர வேண்டும். சட்டக் கல்வி முடித்தவர்களின் குற்றப் பின்னணி குறித்து அவர்கள் பிறந்த இடத்திலும், படித்த இடத்திலும் இருந்து போலீஸாரிடம் நற்சான்றிதழ் பெற மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்த வேண்டும்.
குற்ற வழக்குகளில் தொடர்புடை யவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யக் கூடாது. மூன்றாண்டு தண்டனை உடைய குற்றவழக்கு மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை வழக்கறிஞர்களாக தற்காலிகமாக பதிந்து அவர்களின் வழக்கு விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வழக்கில் விடுதலை பெற்றால் பதிவை நிரந்தர மாக்கலாம்.
சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பும், மாணவர்களின் குற்றப் பின்னணி குறித்து போலீஸாரிடம் சான்றிதழ் பெற வேண்டும். மேலும் வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது. வழக்கறிஞர்கள் பின்னணி குறித்து தகவல் கேட்டால், அதை 3 வாரங்களுக்குள் போலீஸார் வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
சட்டக் கல்லூரிகள், மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாண்டு சட்டப் படிப்பை நிறுத்த வேண்டும். பொறியியல்,மருத்துவ படிப்புக்கு இணையாக, சட்டப் படிப்பை தொழில்முறை கல்வியாக மாற்ற ஐந்தாண்டு சட்டப்படிப்பாக கொண்டுவர வேண்டும் என்பது உட்பட 10 வழிகாட்டுதல்களை வழங்கி, அவற்றை அமல்படுத்த உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து, இந்திய பார் கவுன்சில் மற்றும் பல வழக்கறிஞர்கள் சிலர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.ரவிச்சந்திரபாபு, டி.ராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:
அதில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர் தொழில் ஒரு புனிதமான, கண்ணியமான தொழில். அதன் மகத்துவத்தை அறிந்து, பார் கவுன்சிலும், வழக்கறிஞர்களும் செயல்பட வேண்டும். அதன் மாண்பை காக்கும் வகையில் செயல்பட வேண்டும். இதற்காக, தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின்பேரில் மேலும், வழக்கறிஞர் சட்டத்தில் 6 மாதத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago