உதகையில் ‘நூல் பூங்கா’ மலர்கள், தாவரங்கள்: 12 ஆண்டுகள் பெண்களின் உழைப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

12 ஆண்டுகள் பெண்களின் உழைப்பால், உதகையில் நூல்களால் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த படகு இல்லம் எதிரே 10 ஆயிரம் சதுர அடியில், நூல் மலர்களாலான உலகின் முதல் நூல் பூங்காவை வடிவமைத்துள்ளார் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அண்டனி ஜோசப். உள்ளரங்கில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்துக்குள் நுழைந்தால், வண்ண, வண்ண மலர்கள் வரவேற்கின்றன. நடைபாதையை ஒட்டிய புல்வெளி, மலர்த் தொட்டிகளில் தொங்கும் மலர்கள், குளத்தில் மிதக்கும் தாமரைகள் பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. இந்த மலர்கள், தாவரங்கள், புல்வெளி என அனைத்தும் நூல்களால் வடிவமைக்கப்பட்டவை என்றால் நம்ப முடிகிறதா… ஆனால் அதுதான் உண்மை. பூங்கா ஊழியர்கள் கூறினாலும், நம் மனது அதை நம்ப மறுக்கிறது.

அனைத்து மலர்கள், அவற்றை உருவாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து பூங்கா ஊழியர்கள் விளக்குகின்றனர்.

12 ஆண்டுகள்

இதுதொடர்பாக பூங்கா நிறுவனர் ஆண்டனி ஜோசப் கூறும்போது, “எனக்கு கலை மீது தீராத தாகம். ஓவியம், சிற்பம் வடிவமைத்துக் கொண்டிருந்தேன். கேரளாவில் 1980-களில் கோட்ஸ் வயலா லிமிடெட் நூல் நிறுவனம் சார்பில் நடந்த கண்காட்சியில், நூலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலைப் பொருட்களை காட்சிப்படுத்தினேன். அதற்கு கிடைத்த வரவேற்பும், அந்த நிறுவனத்தினர் அளித்த ஊக்கத்தாலும் இயந்திர உதவி இல்லாமல், கைகளைக் கொண்டே நூலைப் பயன்படுத்தி கலைப் பொருட்கள் தயாரிக்க முடிவு செய்தேன். 1988-ம் ஆண்டு 9 உறுப்பினர்களைக் கொண்டு ஆய்வை தொடங்கினேன். மலர்கள் மற்றும் தாவரங்களை அவற்றின் அசல் தன்மை மாறாமல் வடிவமைக்க தொடங்கினேன். 2002-ம் ஆண்டு நூல் மலர்களைக் கொண்ட தோட்டம் அமைக்க முடிந்தது.

50 திறமையான பெண்களின் 12 ஆண்டுகள் அயராத உழைப்பினால், உலகின் முதல் நூல் பூங்கா, உதகையில் அமைக்கப்பட்டது. தோட்டத்தில் உள்ள மலர்கள், தாவரங்கள், புல்வெளி அனைத்தும் நூல்களைக் கொண்டு, கைகளாலேயே வடிவமைக்கப் பட்டன. இதற்காக, 6 கோடி மீட்டர் நூல் பயன்படுத்தப்பட்டது.

தண்டுகளை கம்பியாலும், மலர்களின் இதழ்கள், இலைகளை சட்டை காலரில் பயன்படுத்தப்படும் கேன்வாஸ் பயன்படுத்தி பின்னர் மலரின் நிறத்திலான நூலைக் கொண்டு மலர்கள் வடிவமைக்கப்பட்டன. இப்பூங்காவில், 150 ரக தாவரங்களின் மாதிரிகள் உள்ளன. நீலகிரி குறிஞ்சி, ஆர்கிட் மலர்கள் குறிப்பிடத்தக்கவை. பூங்காவை காண, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்” என்றார்.

பராமரிப்பது சிரமம்

பூங்காவின் பொறுப்பாளர் ஏ.உஷா கூறும்போது, “காலநிலை மாற்றத்தால் நூலின் நிறம் மங்கிவிடும் என்பதால், உள்ளரங்குகளில் குறிப்பிட்ட ஒளி அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள் மீது தூசு படிந்துவிடும் என்பதால், எந்நேரமும் தண்ணீர் தெளித்து, சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதற்காக 3 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான ஊதியம், பராமரிப்புச் செலவு அனைத்துமே சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளது. நுழைவுக் கட்டணம்தான் பூங்காவின் வருமானம். கோடை காலம் மற்றும் 2-ம் பருவக் காலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். நான்கு மாதங்கள் மட்டுமே வருவாய் கிடைக்கும்.

மேலும், நூலைக் கொண்டு பரிசுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இந்த வருவாயைக் கொண்டு, பூங்காவை ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டால், பூங்காவை பராமரிப்பது கேள்விக்குறியாகிவிடும். கடந்த 15 ஆண்டுகளாக இப்பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்