எண்ணூர் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் 3 முனையங்களை ஆழப்படுத்தும் பணி தொடக்கம்

By ப.முரளிதரன்

எண்ணூர் துறைமுகத்தில் ரூ.50 கோடி செலவில் 3 முனையங்களை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரிய சரக்குக் கப்பல்களை கையாள முடியும்.

பழமையான சென்னை துறைமுகத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, மேலும் ஒரு வர்த்தக முனையம் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் எண்ணூர் துறைமுகம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தொடங்கப்பட்ட 12-வது துறைமுக மான இது, 2001-ம் ஆண்டு சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப் பளவில் ரூ.1,056 கோடி செலவில் தொடங்கப்பட்டது. மேலும், 2004-ம் ஆண்டில் ரூ.1,400 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் 3 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, இத்துறைமுகத்தில் 6 கப்பல் நிறுத்தும் முனையங்கள் உள்ளன. இவற்றில், 5 மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இத்துறைமுகம் தமிழ்நாட்டில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியைக் கையாளுகிறது. தற்போது 3 முனையங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி நடக்கிறது. இவற்றில் 2 முனையங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மின்சார வாரியமே நேரடியாக இறக்குமதி பணிகளை கையாள்கிறது. தற்போது, இந்த முனையங்களை ஆழப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, எண்ணூர் துறைமுக அதிகாரி ஒருவர் `தி இந்து’விடம் கூறியதாவது:

எண்ணூர் துறைமுகத்தில் தற்போது சிறிய கப்பல்கள் மட்டுமே வருகின்றன. பெரிய கப்பல்கள் வருவதற்கு வசதியாக இந்த முனையங்களை ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய கப்பல் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பின் படி, அனைத்து பெரிய துறைமுகங்களிலும் பெரிய ரக கப்பல்களை கையாளுவதற்காக கப்பல் நிறுத்தும் தளங்களை 18 மீட்டருக்கு ஆழப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்திய டிரெட்ஜிங் கார்ப்ப ரேஷன் நிறுவனம் ரூ.50 கோடி செலவில் இப்பணிகளை மேற் கொண்டு வருகிறது. இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.20 லட்சம் டன் எடை கொண்ட பெரிய கப்பல்கள் வர முடியும். இதனால், அதிகளவில் நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியும். இதன் காரணமாக, வர்த்தகர்களுக்கு இறக்குமதி செலவு குறையும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE