மாநில மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக மீனா குமாரி நியமனம்

By செய்திப்பிரிவு

மாநில மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீனா குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்த இடம், நீதிமன்ற உத்தர வுக்குப் பின் நிரப்பப் பட்டுள்ளது.

தமிழக மனித உரிமைகள் ஆணைய தலைவராக சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசல மூர்த்தி, கடந்த 2006 முதல், 2011 ஆகஸ்ட் 27 வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவரைத் தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் பதவி காலியாகவே இருந்தது. தலைவர் பொறுப்பை முதலில் உறுப்பினர் கே.பாஸ்கரனும், பின்னர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி யான உறுப்பினர் கே.ஜெயந்தியும் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பணியிடத்தை நிரப்பக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் ஆனது. அதை நீதிமன்றம் விசாரித்த போது, எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு உறுதியளித்தது. பின்னர் இதேபோன்ற பொதுநல வழக்கு, உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பரில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தப் பதவியில் நியமிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இல்லை என்றும், இருப்பவர்களின் வயது 70 ஐத் தாண்டியுள்ளது. எனவே ஏழு வருடங்கள் அனுபவ முள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க விதிகளை தளர்த்த வேண்டுமென்றும் தமிழக அரசு தெரிவித்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல்வர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட கமிட்டி விரைவில் தகுதியான நபரை நியமிக்க உத்தர விட்டது.

இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவர் பெயர் நேற்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இது குறித்து, பொதுத்துறை முதன்மை செயலர் யதீந்திரநாத் ஸ்வேன் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘தமிழக ஆளுநர் கே.ரோசய்யா ஒப்புதலின் பேரில், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற டி.மீனா குமாரி, தமிழக மாநில மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக நியமிக் கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது அவருக்கு 70 வயது ஆகும் வரை. இதில் எது முதலில் வருகிறதோ, அந்தக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்,’என்று கூறப் பட்டுள்ளது.

இதன் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்த மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பணியிடம் மீண்டும் நிரப்பப்பட்டுள்ளது. புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டி. மீனா குமாரி (தற்போது வயது 63) ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் மாவட்ட எலமன்சில்லி யைச் சேர்ந்தவர் ஆவார்.

இதற்கு முன், மேகாலயா உயர் நீதிமன்ற முதல் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றார். குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மேகாலயா மாநில வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மேகாலயா மாநிலத்துக்கு கடந்த ஆண்டுதான், தனியாக உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் முதல் தலைமை நீதிபதியாக மீனா குமாரி பணியாற்றியுள்ளார்.

இதேபோல், ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் தலைமை நீதிபதி (பொறுப்பு) என்ற சிறப்பையும் பெற்றவர் ஆவார். 63 வயதான மீனா குமாரி, ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற கர்நாடக வயலின் இசை மேதை த்வாரம் வெங்கடஸ்வாமி நாயுடுவின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE