ஹைட்ரோ கார்பன் ஒற்றை லைசென்ஸ் திட்டம்: நாட்டின் திசைவழியை மாற்றப் போகும் ‘ஹெல்ப்’- விதிகளை மாற்றி ஓசையின்றி தொடங்கியது மத்திய அரசு

By சி.கதிரவன்

வறட்சி, விவசாய நெருக்கடி, மாட்டிறைச்சி, ஜிஎஸ்டி, குடியரசுத் தலைவர் தேர்தல் என நாடே களேபரத்தில் இருக்கும் சூழலில், நாட்டின் திசை வழியையே மாற்றக்கூடிய ஹைட்ரோ கார்பன் எனப்படும் புதை எரிபொருட்களை எடுப்பதற்கான ஒற்றை லைசென்ஸ் திட்டத்தை ‘ஹெல்ப்’ என்ற பெயரில் சந்தடியில்லாமல் நேற்று தொடங்கியுள்ளது மத்திய அரசு.

நாட்டின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மரபு சார்ந்த கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மிக ஆபத்தான ஹைட்ராலிக் ஃபிராக்சர் நடைமுறைகளை உள்ளடக்கிய நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் காஸ், ஷேல் ஆயில் ஆகியவற்றை எடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

முன்னர், அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே இவற்றைக் கண்டறிந்து, உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. உலகமயாக்கலுக்குப் பின்னர், நெல்ப் (NELP- New Exploration Licensing Policy) என்ற கொள்கையை 1998-ல் மத்திய அரசு வரையறுத்தது. அதன்படி, தனி யார் நிறுவனங்களும் புதைபடிவ எரி பொருட்களைக் கண்டறிந்து எடுப்பதற் கான அனுமதி வழங்கப்பட்டது.

இதன் உச்சகட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2022-க்குள் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை கணிசமாக உயர்த்தப் போவதாகக் கூறி, பல்வேறு மாற்றங்களை எரிசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாகவே, நாடு முழுவதும் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா (ONGC, Oil India) நிறு வனங்களால் பல்வேறு காரணங்களால் (லாபமின்மை, புதிய இயந்திரங்களை நிறுவ இயலாமை) கைவிடப்பட்ட 65 எண் ணெய் வயல்கள் எனக் கண்டறியப்பட்ட சிறு வயல்கள் (Discovered small field) என்ற தலைப்பில் கடந்த மார்ச் 2016-ல் ஏலம் விடப்பட்டன. இதற்கேற்ப, நெல்ப் (NELP) முறையை மாற்றி, ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy - HELP ) என்ற ஒற்றை லைசென்ஸ் அனுமதியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

இதன்படி, இத்தொழிலில் முன் அனுபவம் இல்லாத பெங்களூருவைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரிஸ் நிறுவனத்துக்கு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் நிறுவனத்துக்கு நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் ஷேல் ஆயில், ஷேல் காஸ் எடுப்பதற்கான வாய்ப்புள்ள காரணத்தால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘ஹெல்ப்’ கொள்கையின் ஒரு பகுதி யாக ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வயல்களை அடையாளப்படுத்தி ஏலம் விடும் முறை என்பதை மாற்றி, திறந்தவெளி அனுமதித் திட்டத்தை (Open Acreage Licensing Programe) மத்திய அரசு நேற்று (ஜூலை 1) தொடங்கி யுள்ளது. இதில், தாங்கள் விரும்பும் இடத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் மே மாதம் 15-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, ‘ஹெல்ப்’ அடிப்படை யில் அனுமதி வழங்கப்படும் என்று மத் திய எரிசக்தித் துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் மக்கள் நலன் மீது பேரிடியாக அமையும். இதற்கு முன்னர் பெட்ரோல், எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் காஸ், ஹைட்ரேட்டுகள் எடுக்க தனித்தனி உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும் என இருந்ததை மாற்றி, ‘ஹெல்ப்’ கொள்கையின்படி ஒரே லைசென்ஸை வைத்து, எல்லாவித ஹைட்ரோ கார்பன் பொருட்களையும் எடுக்கலாம் என்ற திருத்தம் மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.

உதாரணத்துக்கு, ஒரு வகையான ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும்போது, வேறு வகையான ஹைட்ரோ கார்பன் கிடைத்தால், அதற்குத் தனியாக லைசென்ஸ் பெற வேண்டும். ஒன்றை சொல்லி உரிமம் பெற்று, வேறு ஒன்றை சுரண்டும் போக்கை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசின் கையில் இருந்தது. ஆனால், ‘ஹெல்ப்’ திட்டத்தால் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன.

விலை நிர்ணய உரிமை

இதற்கு முன்னர் எந்த விலையில் வேண்டும் என்றாலும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்ய முடி யாது. செலவாகும் தொகை, சற்று கூடுதல் லாபம் வைத்து விற்பனை செய்யலாம். கொள்ளை லாபம் அடிக்க அனுமதி இல்லை. இப்போது கடல் பகுதி, மற்றும் கடினப் பகுதிகளில் எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களுக்கு அந்த நிறுவனம் எந்த விலையை வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம் என அனுமதி தருகிறது அரசு.

தில்லுமுல்லுக்கு அனுமதி

லாபத்தை பங்கிடுவதன் அடிப்படை யில் என்பதை மாற்றி, வருவாய் அடிப்படையில் அரசுக்குப் பங்கு என இந்த புதிய கொள்கை கூறுகிறது. இது, பொதுச் சொத்தாகிய இயற்கை வளத் தைத் தனியார் சுரண்டும் போக்குக்கு மத்திய அரசே அனுமதி அளித்துள்ளது.

வரி, காப்புரிமை தொகை தவிர லாபம் கிடைக்கும் வரையில், அரசுக்கு எந்த பங்கும் தரவேண்டியதில்லை என்ற அடிப்படையில் நிறுவனம் போலியாக லாபமே வரவில்லை என செலவுகளைக் கூட்டி லாபத்தைக் குறைத்து கணக்கு காண்பிக்கவும், அனைத்துக் கட்டுப்பாடு களையும் தளர்த்தியும், வருவாயில் ஒரு பங்கு தந்தால் போதும் என இந்தக் கொள்கையில் மாற்றம் செய் துள்ளது.

மேலும், இறக்குமதி வரி ரத்து, ஆழ மான மற்றும் மிக ஆழமான கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க முதல் 7 ஆண்டுகளுக்கு எந்த கட்டணமும் இருக்காது. முன் வைப்புத் தொகை போன்ற விதிமுறைகள் நீக்கப் பட்டுள்ளன.

தனியார் பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அரசு நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும், இயற்கைச் சீரழிவுக்கும் இட்டுச் செல்லும் இத்திட்டம் மக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படா மலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது. ‘ஹெல்ப்’ திட்டம் மக்களுக்கா? நிறுவனங் களுக்கா? என்பதே சமூக ஆர்வலர்கள் எழுப்பும் மில்லியன் டாலர் கேள்வி.

- வ.சேதுராமன்

இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகியும், மீத்தேன், ஷேல், ‘ஹெல்ப்’ திட்டம், அதன் பாதிப்புகள் குறித்து முதலில் வெளிக் கொணர்ந்தவரான திருவாரூர் மாவட் டம் மன்னார்குடியைச் சேர்ந்த வ.சேதுராமன் தெரிவித்தது:

‘ஹெல்ப்’ என்ற பெயர், ஏதோ உதவிக்கானது போல தோன்றும். ஆனால், இது மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு எதிரான ஒரு கொள்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ‘ஹெல்ப்’ திட்டம் மூலம் ஒற்றை லைசென்ஸ் பெற்று, இயற்கை எரிவாயு எடுக்கிறேன் என்ற பெயரில், மிகவும் ஆபத்தான ஹைட்ராலிக் ஃப்ராக்சர் எனப்படும் நீரியல் முறிப்பு முறையில் மீத்தேன், ஷேல் காஸ், ஷேல் ஆயில் போன்றவற்றை எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

உலக அளவில் கடும் எதிர்ப்புக் குள்ளாகியுள்ள இந்த நடைமுறையை தனியார் நிறுவனங்கள் இங்கு அடாவடி யாக செயல்படுத்தக் கூடும். புதிய ‘ஹெல்ப்’ திட்டம் மூலம், ஒற்றை அனுமதியில் அனைத்துத் திட்டங்களுக் கும் கதவை திறந்து விடுவது, காவிரி டெல்டாவை தரிசாக்கிடும். இத்திட்டம், தனியார் நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் துரப்பண பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரம் அழிவதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ஏற்கெனவே மழையும், காவிரியும் பொய்த்து, நிலத்தடி நீரை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு நடைபெறும் விவசாயம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும். கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்பதால் மத்திய அரசு உடனடியாக ‘ஹெல்ப்’ திட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்