சென்னை காவல் துறையினர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும் என அனைத்து போலீஸாரும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவு தலைமைக் காவலராக பணி செய்து வந்தவர் சங்கீதா. இவருக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மருத்துவ காப்பீடு வழங்க இயலும். இல்லை என்றால் வழங்க இயலாது என காப்பீட்டு நிறுவனத்தினர் தெரிவித்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா கடந்த 24ம் தேதி உயிர் இழந்தார்.
இந்நிலையில், போலீஸாரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போலீஸாரும், அவரது குடும்பத்தினரும் பயன் அடையும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையர் ஒருவர் கூறியதாவது: “தமிழகத்தில் சுமார் 1 லட்சம் போலீஸார் உள்ளனர். அவர்கள் அனைவரது சம்பளத்திலும் மாதம்தோறும் தலா 180 ரூபாய் மருத்துவ காப்பீட்டுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. நோய் பாதிப்பு ஏற்பட்டால் எந்தெந்த நோய்க்கு காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்ற தகவல்களைத் தெளிவாக தருவது இல்லை. கேட்டால் இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விடுகின்றனர்.
அப்படியே நாங்கள் கண்டுபிடித்து மருத்துவமனை சென்றாலும் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் பயனடைய முடியும். மற்ற நோய்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தால் பயன் அடைய முடியாது என திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
மேலும் போலீஸார், அவரது மனைவி, பிள்ளைகளுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. போலீஸாரின் பெற்றோர்களை திட்டத்தில் சேர்த்துக் கொள்வது இல்லை. இப்படி ஒரு நூதன காப்பீட்டுத் திட்டம் வேறு எங்கும் இல்லை. எனவே, போலீஸாரின் பெற்றோரையும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்றார்.
இதேபோல் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்றேன். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளேன் என்று தெரிவித்தும் முன் பணம் பெற்றுக் கொண்டனர். ரூ.87 ஆயிரம் கட்டணம் வந்தது.
ஆனால், காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.52 ஆயிரம் மட்டுமே கட்டினர். மீதம் உள்ள பணத்தை நானே கட்டினேன். போலீஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததின் பேரிலேயே மருத்துவ காப்பீட்டில் என்னால் பயன் அடைய முடிந்தது” என்றார்.
இதேபோல் சென்னையில் காவல் ஆய்வாளராக பணி செய்த மாசானம் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிர் இழந்தார். மருத்துவ கட்டணமாக ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை அவரது குடுபத்தினரே செலுத்தினர். காப்பீட்டுத் திட்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை என மற்றொரு ஆய்வாளர் வருத்தம் தெரிவித்தார். எனவே, காவல் துறையினர் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என ஒட்டுமொத்த போலீஸாருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச எண்ணில் புகார் கூறலாம்
ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனித்தனி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், காப்பீட்டு நிறுவனத்தில் நோயின் பட்டியல் கொடுக்கப்பட்டு இந்த நோய்க்கு இவ்வளவு தொகைதான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் அரசு நினைத்தால் நீக்க முடியும்.
பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் அல்லது குறைபாடு ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண்ணுக்கு (18002335544) புகார் தெரிவிக்கலாம். தங்களது காப்பீடு தொடர்பான சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago