அரசின் திட்டங்களை செம்மைப்படுத்த அமெரிக்க ஆராய்ச்சி மையத்துடன் ஒப்பந்தம்

தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023-ஐ எட்ட மதிப்பீடு மற்றும் செயல்முறைத் திட்டத்துக்காக அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ இலக்காகக் கொண்டு திட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும், அதிக பயன் அளிக்கும் திட்டங்களை உருவாக்கவும் அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி உலக அளவில் மிகச்சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையமான மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின், ஜமீல் - வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் துறை முதன்மை செயலர் எஸ்.கிருஷ்ணன், ஜமீல் வறுமை ஆராய்ச்சி மையத்தின் தெற்காசிய செயல் இயக்குநர் ஷோபினி முகர்ஜி மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

இந்த ஒப்பந்தப்படி பள்ளிக் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சத்துணவு ஆகிய முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மதிப்பீடு மற்றும் திறன் மேம்பாடு செய்ய, உலக அளவில் புகழ்பெற்ற சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்காக, நடப்பு நிதியாண்டில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டில் 5 திட்டங்கள் குறித்து, இந்த ஆய்வகம் மதிப்பீடு செய்து முக்கிய கொள்கைகளை வகுக்கும்.

தமிழக அரசின் ஆரம்பக் கல்வி குறித்து 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, திறனுள்ள வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்காக உருவாக்குதல், நோய்களை கட்டுப்படுத்த சுகாதார விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துதல், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் திட்டங்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும் பள்ளி சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளை போக்குதல் போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE