காவிரி மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

காவிரி நடுவர் மன்ற உத்தரவை மீறி, மேகதாது அருகில் அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வரின் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்ற உத்தரவை, கர்நாடக அரசு திரும்பத் திரும்ப மீறுவதுடன், காவிரியின் கீழ் மட்டத்திலுள்ள தமிழக அரசின் உரிமைகளை நசுக்குவதால், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு அணைகளை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, ஏற்ெகனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முந்தைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு 2013 செப்டம்பர் 2-ல் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது மட்டு மின்றி, சிவசமுத்திரம், ஒகேனக்கல் மற்றும் ராசி மணல் ஆகிய நீர்மின் நிலைய திட்டங்களையும் இத்துடன் இணைத்து, மத்திய நீர் மின் கழகம் அல்லது வேறு மத்திய நிறுவனங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யவும் கர்நாடகா திட்டமிட்டது. இந்த திட்டத்துக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனுமதியின்றி காவிரி நீர் பிடிப்புப் பகுதியி ல் எந்த விதமான நீர் மின் திட்டங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று, மத்திய அரசுக்கு ஏற்ெகனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது மேக தாதுவில் இரண்டு அணைகள் கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த, சர்வதேச அளவிலான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் மேகதாதுவில் கூடுதல் நீரை சேகரிக்கவும், சுமார் 2,500 ஏக்கர் வனப்பகுதி யை இணைக்கவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

இது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு மீறும் செயலாகும். மேகதாது அணை மற்றும் மின் திட்டம்குறித்து கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, உரிய அறிவுரைகளை கர்நாடகா அரசுக்கு வழங்க வேண்டும். காவிரியில் நீர் மின் திட்டம் கொண்டு வருதல், அணை கட்டுதல், நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துதல், குடிநீர் விநியோகம் போன்ற அனைத்து வகையான திட்டங்களுக்கும், தமிழக அரசு அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது என்று, கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது, மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான தொழில்நுட்ப ஆய்வு முயற்சிகளையும் உடனடியாகத் தடுக்க வேண்டும்.

இதேபோல், மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து, கர்நாடகா அரசுக்கு காவிரியில் புதிய திட்டங்களுக்கான எந்தவித அனுமதியும், தமிழக அரசு ஒப்புதலின்றி வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை, மத்திய அரசால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE