குண்டு வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்க்க முயற்சி

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடி உடைந்திருப்பதை நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாகச் சென்ற சிலர் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் விரைந்து சென்று ஏடிஎம் மையத்தை பார்வையிட்டனர்.

அப்போது, ஏடிஎம் இயந்தி ரத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைத்து மர்ம கும்பல் தகர்க்க முயன்றது தெரியவந்தது. பணம் கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் கூறும்போது, ‘‘ஏடிஎம் மையத்தில் சுமார் ஒரு அடி நீள இரும்புப் பைப்பில் கரிமருந்து நிரப்பியுள்ளனர். அதை ஏடிஎம் இயந்திரன் அடியில் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். ஆனால், பைப் வெடிகுண்டில் போதிய அளவுக்கு வெடிக்கும் திறனுள்ள பொருட்களை சேர்க்கவில்லை. இதனால், வெடிப்புத்திறன் குறைந்து அதிர்ச்சியில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி மற்றும் அறையின் உள் அலங்காரம் சேதமடைந்தது.

அங்குள்ள கண்காணிப்புக் கேமிராவில் வெடிவைத்த மர்ம கும்பலின் முகம் பதிவாகி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

பைப் வெடிகுண்டில் பயன்படுத்திய ரசாயனம் எந்த வகையைச் சேர்ந்தது என்று தடய அறிவியல் ஆய்வுக்கு மாதிரிகளை அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE