தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கைக்கு நவீன ரோந்து கப்பல்களை இந்தியா தயாரித்து வழங்குவதற்கு மீனவப் பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா- இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரண்டு ரோந்து கப்பல்களை தயாரித்து இலங்கை கடற்படைக்கு வழங்க 2014-ல் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பேரில் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நவீன ரோந்து கப்பல்களை இந்தியா தயாரித்து வருகிறது. இப்பொறுப்பை மத்திய அரசுக்கு சொந்தமான கோவா கப்பல் கட்டுமான நிறுவனம் ஏற்றுள்ளது.
முதல் கப்பல் ஒப்படைப்பு
முதலாவது ரோந்து கப்பல் கொழும்பில் கடந்த ஜுலை மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி சித்ராங்கனி, இலங்கை கடற்படை தலைமை அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க ஆகியோர் முன்னிலையில் கோவா கப்பல் கட்டும் நிறுவனத் தலைவர் சேகர் மிட்டல் ஒப்படைத்தார்.
105.7 மீட்டர் நீளம், 13.6 மீட்டர் அகலம் கொண்ட கப்பல் தயாரிப்பு செலவு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.426 கோடி) ஆகும். நவீன ஹெலிகாப்டர் இறங்குதளங்களைக் கொண்ட இக்கப்பல் ஒரு மணி நேரத்துக்கு 24 நாட்டி கல் மைல் பயணிக்கக் கூடியது.
இதன் அதிகபட்ச தாங்கும் திறன் 2,350 டன் ஆகும். மேலும் தானியங்கி துப்பாக்கிகள் தளவாடம், ஏவுகணைகள் தாங்கும் அமைப்புகள், சரக்குகள் கையாளுதல், கடல் கொள்ளை தடுப்பு, மீட்புப் பணி, சிறிய அளவிலான படைத் துருப்புகளை ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு அழைத்துச் செல்லுதல் ஆகிய வசதிகளுடன் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கையாளலாம்.
ஆகஸ்ட் 2-ல் அர்ப்பணிப்பு
இந்த கப்பலை இலங்கை கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கொழும்பில் ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை வகிப்பார். இரண்டாவது கப்பல் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் கூறியதாவது:
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றும் உள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, மீனவர்களை சிறையில் அடைப்பது ஆகிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகின்றனர்.
இதனால் இலங்கைக்கு ரோந்து கப்பல்களை இந்தியா வழங்குவதை தமிழக மீனவர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த ரோந்துக் கப்பல்களை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவே இலங்கை பயன்படுத்தக்கூடும்.
மேலும் இந்திய எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கு ஆதரவாக இலங்கை விளங்கி வருகிறது. இலங்கை கடல் பாதுகாப்புக்கு அளிக்கும் ரோந்து கப்பல்கள் சீனாவுக்கு உதவியாக செயல்படும் என்ற சந்தேகம் வலுப்பட்டுள்ளது. எனவே இலங்கைக்கு மேலும் ஒரு ரோந்து கப்பலை தயாரித்து வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago