குழந்தைகள் இறப்புக்கு கர்ப்பகால பராமரிப்பில் அலட்சியமா?

தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் தொடர்ந்து பலியாவது குறித்து தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:

கர்ப்ப காலத்தில் வாந்தி, தலைச் சுற்றல், பசியின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சினைகளை கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த முடியாத சூழல் ஏற்படும். இதை சமாளித்து கருவுற்றிருக்கும் பெண், மருத்துவ ஆலோசனைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளிட்ட அனைத்தையும் 100 சதவீதம் கடைபிடித்தால்தான் தாயும், சேயும் நலமாக இருக்க முடியும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனைவரையும் கண்காணித்து அவர்களுக்கு இதுபோன்ற ஆலோசனைகளை வழங்கவும், உணவு, மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை முறையாக எடுத்துக் கொள்ள வலியுறுத்தவும் கிராமப்புற சுகாதார செவிலியர்களை கூடுதலாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அங்கன்வாடி மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு வழங்குதல், எடை பரிசோதித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டாலும். கிராமப்புறங்களில்தான் கர்ப்பகால பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

கருவுற்ற பெண் மற்றும் அவரது குடும்பத்தாரின் அலட்சியம் மற்றொரு காரணம். 10 மாதங்கள் மட்டுமே வயிற்றில் இருக்கக் கூடிய குழந்தை போதிய எடை மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டுமெனில் இந்த பராமரிப்பில் 80 சதவீதமாவது முழுமையடைய வேண்டும். பல இடங்களில் இந்த சேவை 50 சதவீதத்தை கூட தொடுவதில்லை என்பதே குறை பிரசவம், ஆரோக்கியமில்லாமல் வளரும் சிசுக்கள், பிறக்கும்போதே உடல்நல பாதிப்புடன் பிறக்கும் சிசுக்கள் ஆகியவை அதிகரிக்க காரணம்.

இப்படி தருமபுரி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் பெரும் பாலானவை இறுதியாக வந்து சேரும் இடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங் குழந்தைகள் பிரிவில் தான். அண்டை மாவட்டங்களில் இருந்தும் குழந்தைகள் இங்கு சேர்க்கப்படுகின்றன. இங்கு சேர்த்த பிறகும் உடல்நலம் தேறாவிடில் இறுதியில் அந்த சிசுக்கள் மரணத்தை தழுவுகின்றன. எனவே உடல்நலம் தொடர்பான அரசு சேவையின் மற்றொருபுறம் நிலவும் அலட்சியம்தான் சிசுக்களின் உயிரை விலைகொடுக்கும் சூழலை உருவாக்குகிறது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் இறந்த குழந்தைகள் தொடர்பாக பின்னோக்கி ஆழமாக விசாரித்தால் முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று என்பது வெளிப்படும். எனவே அரசு, கர்ப்பிணி பெண்களின் நலன் பேணும் விவகாரத்தில் இன்னும் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மருத்துவர்கள் குழு கண்காணிப்பு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு நேற்று தருமபுரி வந்தது. சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் குமுதா தலைமையில் மருத்துவர்கள் ரவி, சீனிவாசன், பாலாஜி, ரம்யா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். நேற்று காலை அவர்கள் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து மருத்துவமனையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE