புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு குழந்தைகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

By அ.முன்னடியான்

புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பிரெஞ்சுக் காரர்கள் வடிவமைத்த நேரான வீதிகள், பாரம்பரிய கட்டிடங்கள், அழகிய நீண்ட கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில் போன்றவற்றை ரசிக்க, வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனர். புதுச்சேரிக்கு சுற்றுலா மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது.

இதனால் சுற்றுலாவை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ. 107.2 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்து, முதல் தவணையாக ரூ. 21.40 கோடி நிதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு திட்டங்களை செல்படுத் துவதற்கான பணிகளையும் அரசு துரிதப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கடற்கரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பரந்து விரிந்த இயற்கை மணல் பரப்புடன் கூடிய அழகிய கடற்கரை இருந்தது. மணல் பரப்பில் குழந்தைகள் அனைவரும் விளையாடி பொழுதை கழிப்பர். கடல் அரிப்பால் இயற்கை மணல் பரப்பு மறைந்து தற்போது வெறும் கருங்கற்கள் தான் காட்சித்தருகின்றன.

கடல் அலையில் கால் நனைப்பதையே சிறுவர்களும், பெண்களும் விரும்புவது வழக்கம். இதற்கான வாய்ப்பு புதுச்சேரி பீச் ரோட்டில் கிடையாது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது.

இதனிடையே புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்கவும், செயற்கை மணல் பரப்பை உருவாக்கவும் அரசு முடிவு செய்தது. கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உருவாக்க தொழில் நுட்ப குழுவினர் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். கடல் நீரோட்டத்தில் மணல் அடித்துச் செல்லாமல் தடுக்கவும், கடலில் அள்ளப்படும் மணலை ஒரு குறிப்பிட்ட திசையில் காற்று வீசும்போது கரையில் கொட்டினால் செயற்கை மணல் பரப்பை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தில் தூர்வாரும் மணலை புதுச்சேரி கடற்கரையில் கொட்டி செயற்கை மணல் பரப்பு உருவாக்க திட்டமிடப்பட்டது. தற்போது முகத்துவாரம் ரூ. 14.89 கோடி மதிப்பில் மத்திய அரசு நிறுவனமான டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கப்பலுடன் கூடிய தூர்வாரும் இயந்திரம் மூலம் முகத்துவாரத்தில் இருந்து எடுக்கப்படும் மணல் பெரிய ராட்சத பைப் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, சீகல்ஸ் ஓட்டல் அருகில் கடற்கரை பகுதியில் பீய்ச்சி அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் தூர் வாரி கடற்கரையில் கொட்டப்படும் மணல், கடல் அரிப்பால் மீண்டும் கடலுக்கு செல்லாமல் இருப்பதை தடுப்பதற்காக தலைமை செயலகம் எதிரில் மத்திய அரசின் புவி அறிவியல் மற்றும் தேசிய கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் மூலம் செயற்கை மணல் பரப்பு ஏற்படுத்த கடலுக்கு அடியில் நவீன தொழில்நுட்ப ரீதியில் தடுப்பு சுவர் போன்ற கட்டுமான பணி ரூ. 20 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கடலில் கருங்கற்கள் கொட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளால் தலைமை செயலகம் எதிரில் கடந்த சில தினங்களாக செயற்கை மணல் பரப்பு உருவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கடற்கரை யில் உருவாகியுள்ள இந்த மணல் பரப்பு குழந்தைகள், சுற்றுலா பயணிகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இதில் துள்ளிக்குதித்து விளை யாடினர். பலரும் கடலில் இறங்கி குளித்தனர்.

கொட்டப்பட்டுள்ள பாறைகளில் இறங்கி மணல் பரப்பு பகுதிக்கு செல்லவும் அவதிப்பட்டனர். மணல் கொட்டும் பணி, செயற்கை மணல் பரப்பு பணிகள் முழுமை அடைந்தால் கடற்கரையில் நீண்ட தூரத்துக்கு மணல் பரப்பு உருவாகும்.

காலாப்பட்டு, வீராம்பட்டினம், மூர்த்திகுப்பம் போன்ற கடற்கரை பகுதிகளில் பரந்த மணல் பரப்பு காணப்பட்டாலும் இந்த பீச் ரோடு புதுச்சேரி நகர் பகுதியில் உள்ளதால் இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்