‘இந்தியாவில் காந்தி எப்படியோ அப்படியே தமிழகத்தில் காமராஜர்’: ஜி.கே.வாசன் பேச்சு

தமிழகத்தில் காமராஜர் பெயரை உச்சரிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியில் பேசியிருக்கிறார்கள். அப்படியென்றால் இவர்களால் காமராஜர் ஆட்சியை எப்படி அமைக்க முடியும்?. இந்தியாவில் காந்தி எப்படியோ அப்படியே தமிழகத்தில் காமராஜரும் என்றார் ஜி.கே.வாசன்.

திருச்சியில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள புதியகட்சி தொடக்க விழா குறித்து தொண்டர்களுடன் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

காங்கிரஸிலிருந்து பிரிந்த பிறகு இது சந்தர்ப்பவாதம், பதவியை அனுபவித்துவிட்டு சென்றுள்ளார்கள், இவர்களுக்கு பின்னணியில் பாஜக துணை நிற்கிறது என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள். இதற்கு காரணம் அங்கு இருந்தபோது என் மூலமாக எதையும் டெல்லியில் சாதித்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையாக இருந்தார்கள். இனிமேல் அது நடக்காது என்பதனால் இவ்வாறு பேசி வருகிறார்கள்.

ஜி.கே. மூப்பனார் மறைந்தகாலகட்டத்தில் தமாக தமிழகத்தில் முக்கிய கட்சிகளில் 3-வதாக இருந்தது. 23 எம்எல்ஏ-க்களுடன் மத்தியில் ஆட்சியில் இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தோம். அப்போது இணையாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருப்போம் அல்லது நம்முடைய ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்கி இருப்போம்.

காங்கிரஸில் உழைப்ப வர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுவில்லை என்பதனால் அங்கிருந்து வெளியேறியுள்ளோம். புதிய இயக்கம் தொடங்குவது மிகவும் கடினமானதுதான் ஆனால், முயன்றால் மிகவும் எளிது என்பது எனக்கு தெரியும்

நாணயம், நம்பிக்கை, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை நம்மால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். மக்களின் நம்பிக்கைதான் தேர்தலில் வாக்காக மாறும். திருச்சி மாநாட்டில் இந்தியாவை திரும்பி பார்க்கச் செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தர்மபுரி மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும்.

இலங்கையிலிருந்து தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலைக்கு அனைத்து கட்சிகளுக்கும் பங்குண்டு. 2016-தேர்தலில் எங்கள் கட்சி பலமான கட்சியாக திகழும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE