பொது விநியோகத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தும் முயற்சியை கைவிடுக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

நியாய விலைக் கடைகளுக்கு பதிலாக நேரடி உணவு மானியம் என்ற சாந்தகுமார் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது. இப்போதுள்ள உணவு மானிய முறையே தொடரும் என மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் முறையை கைவிட்டு, உணவு மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய உணவுக்கழகத்தை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவருமான சாந்தகுமார் யோசனைத் தெரிவித்திருக்கிறார்.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு நலிவடைந்த நிலையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தை சீரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய உணவு அமைச்சருமான சாந்தகுமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி அமைக்கப்பட்ட இக்குழு அடுத்த 3 மாதங்களில் அதாவது நாளைக்குள் (நவம்பர் 20) அதன் பரிந்துரைகளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி உணவுக் கழகத்தை சீரமைப்பதற்கான பரிந்துரைகளை தயாரித்துள்ள சாந்தகுமார் குழு, எந்த நிமிடமும் அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாந்தகுமார் தலைமையிலான பரிந்துரை அறிக்கையில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் மிகவும் ஆபத்தானவையாக இருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.

பொது வினியோகத் திட்டத்தின்படி நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டை தாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடியை மிச்சப்படுத்தலாம் என்பது தான் சாந்தகுமார் குழு பரிந்துரைகளின் முக்கிய அம்சமாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது அரசுக்கு ரூ.30,000 கோடி லாபம் தரும் திட்டம் போன்று இது தோன்றினாலும் இது பொது வினியோகத் திட்டத்தையும், உணவுப் பாதுகாப்பையும் குழி தோண்டி புதைத்துவிடும் ஆபத்தான திட்டம் ஆகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருந்த போது அதை கடுமையாக எதிர்த்தேன். இதையடுத்து இத்திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது.

உணவு மானியத்தை நேரடி பயன் மாற்றத் திட்டத்தின் மூலம் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் நாடு முழுவதுமுள்ள நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டு விடும். அதன்பின் அரசு தரும் மானியத்தைக் கொண்டு வெளிச்சந்தைகளில் தான் உணவு தானியங்களை வாங்க வேண்டியிருக்கும். இது மக்களுக்கு எவ்வகையிலும் பயன் தராது.

உதாரணமாக தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. நேரடி மானியத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அதிகபட்சமாக ஒரு கிலோ அரிசிக்கு ரூ. 8 மட்டுமே மானியமாக கிடைக்கும்.

இதைக்கொண்டு வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி வாங்கமுடியுமா? என்ற வினாவுக்கு ஆட்சியாளர்கள் தான் விடையளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, நேரடி உணவு மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நேரடி கொள்முதல் முறை அழிந்து விடும் என்று கடந்த 25.11.2012 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். அப்போதிருந்த மத்திய அரசு இதை மறுத்தது. ஆனால், இப்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், பொதுவினியோகத் திட்டம் ரத்து செய்யப்படும்; தானியக் கொள்முதல் முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று வல்லுனர் குழுவின் தலைவர் சாந்தக்குமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிச்சந்தையில் உணவு தானியங்களின் விலையைக் கட்டுப்படுத்த பொது வினியோகத் திட்டம், உழவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நேரடிக் கொள்முதல் திட்டம் என்பது தான் ஏழைகளையும், உழவர்களையும் காப்பதற்கானத் தத்துவம் ஆகும்.

ஆனால், சாந்தகுமார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் பொது வினியோகத் திட்டம், நேரடிக் கொள்முதல் திட்டம் ஆகிய இரண்டுமே ஒழிக்கப்பட்டு விடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க நேரிடும். இது ஏழைகளுக்கும், உழவர்களுக்கும் மிகப் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

பொது வினியோகத் திட்டத்தில் சில குறைகள் இருப்பது உண்மை தான். அக்குறைகளை சரி செய்வதற்கு பதிலாக திட்டத்திற்கே மூடுவிழா நடத்த முயல்வது நோய்க்கு பயந்து நோயாளியை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும்.

எனவே நியாய விலைக் கடைகளுக்கு பதிலாக நேரடி உணவு மானியம் என்ற சாந்தகுமார் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது. இப்போதுள்ள உணவு மானிய முறையே தொடரும் என மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE