முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணித்த பெண்ணின் நான்கரை சவரன் மதிப்புள்ள தாலிச் செயின் திருடு போனதற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பி.ஜெயந்தி என்பவர் சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் மும்பையிலிருந்து சென்னை வருவதற்காக சென்னை மெயில் ரயிலில் கடந்த 2013 பிப்ரவரி 13-ம் தேதி புறப்பட்டேன். பின்னர், பிப்ரவரி 15-ம் தேதி அந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தபோது எனது கழுத்தில் இருந்த நான்கரை சவரன் மதிப்புள்ள தாலிச் செயினை காணவில்லை. அந்த ரயிலில் பயணித்த ரயில்வே ஊழியரோ அல்லது முன்பதிவு செய்த பெட்டியில் பயணித்த மூன்றாம் நபரோ எனது செயினை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் எனது செயினை போலீஸார் கண்டறியவில்லை. எனவே, ரயில்வேயின் சேவை குறைபாட்டுக்காக எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் டி.கலையரசி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மும்பையில் இருந்து சென்னை வரும் வழியில் ரேனிகுண்டா ரயில் நிலையத்தில் கண் விழித்துள்ளார். அப்போது, அவரது தாலிச் செயின் கழுத்தில் இருந்துள்ளது. பின்னர், அவர் 2013 பிப்ரவரி 14-ம் தேதி நள்ளிரவு தூங்கியுள்ளார்.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 15-ம் தேதி அதிகாலை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தபோது அவரது செயினை காணவில்லை. ரயில்வே சட்டப்பிரிவு 100-ன் படி பயணியின் கவனக்குறைவால் அவர்கள் கொண்டு வரும் பொருளுக்கு ஏற்படும் இழப்புக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் கடமை
மனுதாரர் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளார். எனவே, ரயில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டை சோதனை செய்வதோடு, இரவு நேரத்தில் கதவை பூட்ட வேண்டும். அதோடு, வேறு நபர்கள் யாரேனும் நுழைகிறார்களா என்று பார்க்க வேண்டும். மேலும், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டியது ரயில்வேயின் கடமை.
மனுதாரர் தூங்கியபோது திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ரயில் பெட்டியின் கதவுகள் சரியாக அடைக்கப்பட்டிருந்தால் மூன்றாவது நபர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நுழைந்திருக்க மாட்டார்கள். மனுதாரரின் தாலிச் செயின் திருடுபோனது அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை தெற்கு ரயில்வே வழங்க வேண்டும். அதோடு, வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
திருட்டு சம்பவங்கள் 2 மடங்கு அதிகரிப்பு
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (என்சிஆர்பி) தகவலின்படி கடந்த 2013-ம் ஆண்டில் ரயில்வே போலீஸாரால் நாடு முழுவதும் மொத்தம் 26,620 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளன. அதில், 18,695 திருட்டு வழக்குகள். அதேபோல 2014-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 31,609 குற்ற வழக்குகளில் 23,231 திருட்டு வழக்குகள். 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 39,239 வழக்குகளில், 29,686 திருட்டு வழக்குகள் ஆகும். கடந்த 2013-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2015-ம் ஆண்டில் ஏறக்குறைய 2 மடங்கு அளவுக்கு ரயில்வே போலீஸாரால் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, ரயில்களில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்க ரயில்வே துறை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago