திரையரங்குகள், மால்களில் உணவு பொருட்களுக்கு பல மடங்கு (எம்ஆர்பி) விலை வைத்து விற் பதைத் தடுக்கும் வகையில், சட்ட முறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011-ல் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் வரும் ஜனவரி முதல் ஒரே பொருளுக்கு திரையரங் குக்கு வெளியே ஒரு (எம்ஆர்பி) விலையும், உள்ளே அதிக (எம்ஆர்பி) விலையும் வைத்து விற்கப்படுவது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக திரையரங்குகளும், மால்களும் உள்ளன. இதில், மால்களுக்குகூட வெளியிருந்து நாம் குடிநீரை எடுத்துச் செல்ல முடியும். ஆனால், திரையரங்குகளுக்கு பணத்தை மட்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, வெறுங்கையுடன்தான் நுழைய முடியும். எந்தவித உணவு பொருட்களையும் வெளியில் இருந்து வாங்கிச் செல்ல திரையரங் கில் அனுமதி இல்லை. இதனால், வேறு வழியில்லாமல் அங்கு வைத் திருக்கும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும். அந்தப் பொருட் கள் அனைத்தும் வெளியில் விற்கப் படும் விலையிலிருந்து பல மடங்கு விலையில் விற்கப்படுகின்றன.
உதாரணமாக, சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பிரபல குடிநீர் நிறுவனத்தின் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.50-க்கு விற்கின்றனர். வெளியில் அதே குடிநீர் பாட்டில் ரூ.20-க்கு விற்கப் படுகிறது. இதுகுறித்து கேட்டால், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆர்பி) ரூ.50 என பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ளதை திரையரங்க ஊழியர்கள் காண் பிக்கின்றனர். இவ்வாறு ஒரே பொருளுக்கு இரு வேறு (எம்ஆர்பி) விலை வைத்து விற்பனை செய்வது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இருப்பினும், அவ்வாறு விற் பவர்களைத் தண்டிக்க சட்டத்தில் தெளிவான விதிகள் இல்லாததால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. எனவே, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சட்ட முறை எடையளவு விதிகளில் திருத் தம் மேற்கொள்ள வேண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட் டது. இதையடுத்து, சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011-ல் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் வரும் 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகிறது.
விதிகளை மீறினால் நடவடிக்கை
இதுதொடர்பாக, மாநில சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: திரையரங்குகள், மால்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரே பொருளுக்கு இருவேறு (எம்ஆர்பி) விலை வைத்து விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. எனவேதான், மத்திய அரசு விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இலவசமாக குடிநீர் அளிக்க வேண்டும்
திரையரங்குகளில் குடிநீர் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2015-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், “பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் இருந்து கொண்டுவரும் குடிநீர் பாட்டிலை அனுமதிக்காத திரையரங்குகள், சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், சேவைக் குறைபாடு காரணமாக திரையரங்குகள் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்” என்று உத்தரவிட்டது. மேலும், அந்த உத்தரவு குறித்து நுகர்வோருக்கு தெரியப்படுத்த, அதன் நகலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பவும் தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், பெரும்பாலான திரையரங்குகள் இந்த உத்தரவுக்கு ஏற்ப தரமான குடிநீரை இலவசமாக வழங்குவதில்லை. எனவே, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago