முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி சென்னையில் பேட்டி

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து குறைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள சமாஜத்தில் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று சென்னை வந்திருந்தார். அங்கு 10 ஏழை ஜோடிகளுக்கு திரு மணத்தை நடத்திவைத்து மணமக் களை வாழ்த்திப் பேசினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளம் மறுப்பு தெரிவிக்க வில்லை. தண்ணீரை முழுமையாக தர நாங்கள் உறுதியளிக்கிறோம். ஆனால் கேரள மக்களின் பாதுகாப் பும் எங்களுக்கு முக்கியமாகும். 117 ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மையை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். பழைய காலத்து அணை என்பதால் பாதுகாப்பு முக்கிய மாக கருதப்படுகிறது. அணையின் பாதுகாப்பு குறித்த கவலை எங்களுக்கு உண்டு. இந்த விவ காரத்தில் தமிழக அரசும், மக்களும், கேரள மக்களின் உணர்வு களை புரிந்துகொள்ள வேண்டும்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். அந்த கடிதத்தில் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை தெரிவித்து இருக்கிறேன்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து குறைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களுக்கு தண்ணீர் தேவை குறித்து எங்களுக்கு தெரியும். தமிழகத்தோடு இணக்கமான சூழலையே கேரளம் விரும்புகிறது. முல்லை பெரியாறு அணையில் போடப்பட்ட பாதுகாப்பை மீறி பீர்மேடு எம்எல்ஏ பிஜுமோல் பார்வையிடச் சென்றது தவறுதான்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மலையாளி குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்தான் கேரள அரசு சிந்தித்து முடிவெடுத்துவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE