ஜெயலலிதாவை விடுவிக்க முயல்கிறதா மத்திய அரசு?- ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்துள்ளது சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரை விடுவிக்க மத்திய அரசு முயல்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, "ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார். இதை அவமானம் என்று அழைப்பது நடந்த நிகழ்வை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது போலாகும்.

ஆனால் இதன் பிறகும் பா.ஜ.க. தலைமை தாங்கும் மத்திய அரசுக்கு ஏதாவது நேர்மை மிச்சமிருக்கிறதா? "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய்மையான, ஊழலற்ற அரசைக் கொடுப்போம்" என்று தேர்தல் நேரத்தில் இந்திய மக்களுக்கு பா.ஜ.க.வினர் வாக்குறுதி கொடுத்தார்களே. அது இப்படி செயல்படுவதற்குத்தானா?

இனி அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்? கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவரது ஊழல் வழக்கு மேல்முறையீட்டிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க ஒட்டு மொத்த மத்திய அரசும் செயல்படப் போகிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதில் தான் இப்போது தேவை. சத்தம் போடாமல் ஜனநாயத்தை இப்படி கேலிக்கூத்தாக்கும் முயற்சியை தமிழக மக்கள் நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE