3,27,947 போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் காமராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

போலியானவை என கருதப்படும் 3,27,947 குடும்ப அட்டைகள் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கூறியுள்ளார்.

குடும்ப அட்டைதாரர்களின் குறைதீர் முகாம்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், ‘‘நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்ப அட்டை குறைதீர் முகாம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டையில் தேவைப்படும் மாற்றங்களை பொதுமக்கள் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடக்கும் குறைதீர் முகாம்கள் மூலம் நிவர்த்தி செய்துகொள்கின்றனர்.

இதனால் கடந்த 2011 ஜூன் மாதம் முதல் இம்மாதம் நவம்பர் வரை 2,95,942 மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

சிறப்பாக செயல்பட்டு வரும் இத்திட்டத்தை மத்திய அரசின் உணவுத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2011 ஜூன் மாதம் முதல் இம்மாதம் அக்டோபர் வரை 10,82,279 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் போலியானவை என கருதப்படும் 3,27,947 குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அரசு உணவுத்துறை முதன்மை செயலாளர் எம்.பி. நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE