காங்கிரஸுடன் உறவைப் புதுப்பிக்க என் மீது பழி போடுகிறார் கருணாநிதி: மீனவர் பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஜெயலலிதா பதிலடி

By செய்திப்பிரிவு





இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும்போது, பிரதமருக்கு உடனுக்குடன் கடிதம் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டபோதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கட்சத்தீவை மீட்க முயற்சி...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் சிறை பிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத் தீவையும், அதை சுற்றியுள்ள பகுதியையும் இலங்கைக்கு தாரைவார்த்ததுதான். எனவேதான், கச்சத் தீவை மீட்டெடுக்க அயராது பாடுபட்டு வருகிறேன்.

இந்நிலையில், 'தமிழக மீனவர்களின் துயர் தீராததற்கு யார் காரணம்?' என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை படித்துப் பார்க்கும்போது, 'குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல்' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு நிலை என இரட்டை வேடம் போடுவது கருணாநிதிக்கு கைவந்த கலை.

நகைப்புக்குரியது...

1996 முதல் 1998-ம் ஆண்டு வரை, மற்றும் 1999 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் மத்திய கூட்டணி அரசில் பங்கு வகித்த போதும் சரி; 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி திமுக ஆட்சியின் முதலமைச்சராக இருந்தபோதும் சரி; தமிழக மீனவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் கருணாநிதி.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதற்கு மூலகாரண மான கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்த கருணாநிதி, தற்போது தமிழக மீனவர்கள் பற்றி நீட்டி முழக்குவது நகைப்புக்குரியதாக உள்ளது.

கருணாநிதி தனது அறிக்கையில், இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் நடக்காததற்கு நான்தான் காரணம் என்று என் மீது குற்றம் சுமத்தி, மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார். அவரது இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சியுடன் உறவை புதுப்பித்துக் கொள்ள உதவுமே தவிர, மீனவர் பிரச்சினையை தீர்க்க வழி வகுக்காது.

மத்திய அரசு அலட்சியம்...

மத்திய அரசைப் பொறுத்தவரை, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் ஓர் அலட்சியப் போக்குடன்தான் செயல்படுகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. பிரதமரால் எனக்கு எழுதப்பட்ட பல கடிதங்கள் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

இருப்பினும், இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மீனவச் சங்கங்கள் என்னிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையினை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் இதற்குத் தேவையான அனுமதியை அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும், இலங்கை மீனவர்கள் சார்பில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் பட்டியலை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறும் பிரதமரை கேட்டுக் கொண்டு தொடர்ந்து கடிதம் அனுப்பியிருந்தேன்.

அதன் அடிப்படையில், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தற்போது செய்து வருகிறது. எனது உத்தரவின் பேரில், 20.1.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ள இரு நாட்டு மீனவர்கள் கூட்டம் தொடர்பாக தமிழக மீன்வளத் துறை செயலாளர் டெல்லியில் இந்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்தார்.

அப்போது, இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் இந்தக் கூட்டத்திற்கு முன்பு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை 13.1.2014 முதல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மீனவர்கள் விடுவிக்கப்படுவர்...

எனவே, தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள்.

தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும். 20ல் பேச்சுவார்த்தை இத்தகைய சுமுகமான சூழ்நிலையில், 20.1.2014 அன்று தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை கட்டிக் காப்பதில் அரசு முழு முனைப்புடன் செயல்படும். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்