சென்னையில் 10 ஆயிரம் ஆட்டோக்களின் ஆவணங்கள் சில அடாவடி பைனான்சியர்களிடம் சிக்கியுள்ளன. அதிக வட்டி கட்டாததால் அவற்றை மீட்க முடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை
சென்னை நகரச் சாலைகளில் திரிந்து கொண்டிருந்த பல ஆயிரம் ஆட்டோக்கள் நேற்று திடீரென மாயமாகிவிட்டன. முறையான ஆவணங்கள் இல்லாததால், போக்குவரத்து மற்றும் காவல்துறையின் கூட்டு சோதனைக்குப் பயந்து அந்த வாகனங்கள் இயக்கப்படாமல் போயிருக்கக் கூடும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஆட்டோ மீட்டர் கட்டணப்படி புதிய கட்டண அட்டைகளைப் பெறுவதற்கான கெடு முடிந்த முதல் நாளான நேற்று, போக்குவரத்துத் துறை மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடிக்குப் பயந்து முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்ககவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக சென்னை வக்கீல் ராமமூர்த்தி தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து, தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை புதிதாக நிர்ணயித்து அமல்படுத்தவேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநலச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயித்த தமிழக அரசு அதை கடந்த 25-ம் தேதி முதல் செயல்படுத்துமாறு உத்தரவிட்டது.
அரசு கெடு
இதன்படி, முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25, அடுத்தடுத்த கிலோ மீட்டர்களுக்கு தலா ரூ.12 என கட்டணம் வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், அதற்கான கட்டண அட்டையை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கட்டண அட்டைகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், மீட்டர் மெக்கானிக் கடைகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் பிறகு, சென்னையில் இயங்கும் 71 ஆயிரம் ஆட்டோக்களில் 47 ஆயிரம் ஆட்டோக்கள் மட்டும் கட்டண அட்டை பெற்றிருப்பதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.
தமிழக அரசின் கெடு நேற்று முன்தினம் முடிந்ததையடுத்து, போக்குவரத்துத் துறையினரும், போக்குவரத்துக் காவல்துறையும் இணைந்து நேற்று காலையில் இருந்து இரவு வரை அதிரடி வேட்டை நடத்தினார்கள். தென்சென்னை மண்டலப் பகுதியில் 60, வடசென்னை மண்டலத்தில் 50 என மொத்தம் 110 ஆட்டோக்களை போக்குவரத்துத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஆனால், போக்குவரத்துத் துறையினர் எதிர்பார்த்தபடி, அதிக அளவிலான ஆட்டோக்கள் சிக்கவில்லை. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் ’தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
சோதனை தொடரும்
சென்னையில் 42 குழுக்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன. இதில் 21 குழுக்களில் தலா 2 மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு காவலர் இருப்பார்கள். மற்ற 21 குழுக்களில் தலா ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு காவலர் உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. தென்சென்னை பகுதியில் 44 ஆட்டோக்கள் உள்பட 110 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பல ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள், பர்மிட் இல்லாமல் இருந்தன. 24 ஆயிரம் ஆட்டோக்கள் இன்னமும் கட்டண அட்டை வாங்காமல் உள்ளனர். அவற்றில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் எங்கு இருக்கின்றன என்றே தெரியவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாததால் மாயமாகியிருக்கலாம் என்று கருதுகிறோம். பழைய ஆட்டோக்களை வாங்கியவர்கள், முகவரி மாற்றாமல் இருப்பதால், அவர்களிடம் பதிவுச் சான்றிதழ்களில் சொந்த முகவரி இல்லாமல் இருக்கக் கூடும். அதனால் அவர்கள் ஆட்டோக்களை இயக்காமல் போயிருக்கலாம். மீட்டர்களை மாற்றி அமைக்க கடைசி தேதி அக்டோபர் 15 தான் என்றாலும் எங்களது கண்காணிப்பு நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.சேஷசயனம், ’தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
பைனான்சியர்கள் பிடியில்
சென்னையில் 10 ஆயிரம் ஆட்டோக்களின் ஆவணங்கள் சில அடாவடி பைனான்சியர்களிடம் சிக்கியுள்ளன. அதிக வட்டி கட்டாததால் அவற்றை மீட்க முடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கடும் கெடுபிடி காரணமாக அவர்கள் ஆட்டோக்களை இயக்கவில்லை. இதுமட்டுமி்ன்றி, மீட்டரை திருத்தித் தரும் மெக்கானிக் கடைகளில் அதிக பணிகள் காரணமாக அவற்றைத் திருப்பித் தருவதற்கு பல நாள்கள் ஆவதால் ஆட்டோ ஓட்டுநர்கள், வாகனங்களை இயக்காமல் போயிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago