275 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

இலங்கை சிறையில் நீண்ட நாட்களாக வாடி வரும் 250 தமிழக மீனவர்கள் உள்பட சமீபத்தில் சிறைபிடிக்கப்பட்ட 25 மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா மவுனமாக இருப்பதால், இலங்கை அரசின் அத்துமீறல்கள் தொடர்கின்றன என்று பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகளை சொல்ல வார்த்தைகளின்றி, மிகுந்த ஏமாற்றத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். மீனவர்கள் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் படும் துன்பத்துக்கு அளவே இல்லை.

கடந்த டிசம்பர் 28, 29 ந் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 40 பேரும், அவர்களது 9 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்டதை, டிசம்பர் 30-ம் தேதியன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். கடலோரப் பகுதிகளில் 'வல்லத்தில்' சென்று மீன் பிடித்து சொற்ப வருமானத்தில் வாழும் தமிழக மீனவர்கள் கூட இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் சமீப காலங்களில் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாக்ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் தாங்கள் காலம் காலமாக மீன் பிடித்து வந்த பாரம்பரிய இடங்களுக்கு சென்று மீன் பிடிக்க முடியாதபடி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மண்டபம் மீனவர்கள்

இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி, 5 இயந்திரப் படகுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மண்டபம் தெற்கு பகுதியில் இருந்து சென்று மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

வழக்கமான இடத்தில் அவர்கள் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்களை பிடித்துச் சென்றுவிட்டது.

மேலும், இவ்வாறாக கடத்திச் செல்லப்பட்ட 250 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ளதையும், அவர்களது 79 மீன்பிடி படகுகள் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளதையும், அவற்றை பயன்படுத்த முடியாத அளவுக்கு இலங்கை ராணுவத்தினர் சேதப்படுத்திவிட்டதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பாக் ஜலசந்தியில் நிராயுதபாணிகளாக மீன் பிடிக்கச் செல்லும் ஆயுதம் இல்லாத, அப்பாவி தமிழக மீனவர்களை தினம், தினம் இலங்கை கடற்படை விரட்டியபடி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படை தன் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது.

இந்திய அரசு போதுமான அளவுக்கு இலங்கையை கண்டிக்காததே இத்தகைய தொடர் அடாவடிக்கு காரணமாகும். இந்திய அரசின் இத்தகைய செயல்பாடு மீனவ சமுதாய மக்களிடம் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தாங்கள் உடனே தனிப்பட்ட முறையில் இந்த பிரச்சினையில் தலையிட்டு, இலங்கை சிறைகளில் உள்ள 250 தமிழக மீனவர்களை மீட்க உறுதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

மேலும், ஜனவரி 2-ம் தேதியன்று சிறை பிடிக்கப்பட்ட 25 மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 84 மீன்பிடி படகுகளையும் இலங்கையிடம் இருந்து விரைவில் மீட்க வேண்டும் என்றும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்