காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றினால் வேலைநிறுத்தம்: அகில இந்திய ஊழியர் சங்கம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நேரடி அந்நிய முதலீட்டுக்கு வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றினால், அதைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என பொது காப்பீட்டு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜே.குருமூர்த்தி, சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி மூலதனத்தை அதிகரிக்கவும், அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை 2008-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி மூலதனத்தை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தவும், அரசுத் துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் 49 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

இந்த சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பாலிசிதாரர்களுக்கும் எதிராக அமைந்துள்ளது. 1973-ம் ஆண்டு ரூ.19.5 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்ட 4 அரசு பொது காப்பீட்டு நிறுவனங்கள் 2013-14ம் ஆண்டு ரூ.5,899 கோடி லாபத்தை ஈட்டின. இதில், மத்திய அரசுக்கு ரூ.1,048 கோடி ஈவுத் (டிவிடென்ட்) தொகை அளித்துள்ளன.

இவ்வாறு லாபத்தில் ஈடுபட்டு வரும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 24-ம் தேதி கூடவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், இச்சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றினால், அதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.

இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE