காசநோய் விழிப்புணர்வு போட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

உலக காசநோய் தினம் நாளை மறுநாள் (மார்ச் 24) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் காசநோய் பற்றிய விழிப்புணர்வை சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

8 தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 50 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். காசநோய் தொடர்பான கேள்விகளுக்கு மாணவ, மாணவிகள் பதில் அளித்தனர். மாணவ, மாணவிகள் வரைந்த காசநோய் விழிப்புணர்வு ஓவியங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக விஞ்ஞானி டாக்டர் பீனா ஈ. தாமஸ் கூறுகையில், ‘‘காசநோய் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தினால், அவர்கள் பெற்றோரிடம் தெரிவிப்பார்கள்.

பெற்றோர் மற்றவர்களிடம் சொல்வார்கள். இதன் மூலம் காசநோய் குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினரையும் விரைவாக, எளிதாக சென்றடையும்’’ என்றார்.

சென்னை சேத்துப்பட்டு தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் மாணவ மாணவிகள் வரைந்த காசநோய் விழிப்புணர்வு ஓவியங்களைப் பார்வையிட்டு மதிப்பெண் போடுகிறார் ஆசிரியர். படம்: சி.கண்ணன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE