காணும் பொங்கலன்று மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: பலூனில் கேமரா பொருத்தி கண்காணிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரளுவார்கள். இதையடுத்து, தடுப்புகள் அமைத்தல், கண்காணிப்பு கோபுரம் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று (13-ம் தேதி) போகிப் பண்டிகை, நாளை பொங்கல் திருநாள், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி காணும் பொங்கல். இந்த நான்கு நாட்களும் வீடுகளில் உற்சாகம் களைகட்டியிருக்கும். நகரங்களை விட கிராமங்களில் பொங்கலின் உற்சாகம் அதிகமாக இருக்கும்.

காணும் பொங்கல் தினத்தன்று பலர் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். அன்று சென்னை மெரினா கடற்கரை களை கட்டியிருக்கும். திருவிழாபோல மக்கள் கூட்டம் நிரம்பிவழியும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மெரினா கடற்கரைக்கு வருவார்கள். பலர் மாட்டு வண்டிகளிலும் வருவதுண்டு.

கடற்கரை மணல், மரங்களின் நிழல், புல்தரைகளில் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது, விளையாடுவது என அமர்க்களப்படுத்துவார்கள். மக்களின் வசதிக்காக அன்றைய தினம் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்படும். இதனால் சாலைகளிலும் மக்கள் சாதாரணமாக நடப்பதை காண முடியும்.

மக்கள் அதிகமாக கூடுவதால் வியாபாரமும் பரபரப்பாக நடக்கும். மெரினா கடற்கரை பகுதியில் வியாபாரம் செய்ய அங்குள்ள சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், காணும் பொங்கல் தினத்தில் யார் வேண்டுமானாலும் மெரினாவில் வியாபாரம் செய்யலாம். இதனால் வியாபாரிகளின் கூட்டமும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் தினத்தில் சுமார் 2 லட்சம் பேர் மெரினா கடற்கரைக்கு வருவார்கள். இந்த ஆண்டும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் இப்போதே தொடங்கிவிட்டனர்.

கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதால் அன்றைய தினத்தில் கடலில் குளிக்க யாருக்கும் அனுமதி கிடையாது. கடற்கரை முழுவதும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்படும். அந்தத் தடுப்பை தாண்டி யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது. கடலின் ஓரத்தில் 10 அடிக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நிறுத்தப்பட்டு கடலுக்குள் யாரும் இறங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். குதிரைகளிலும் போலீஸார் வலம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மெரினாவில் 4 இடங்களில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்படுகிறது.

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தகவல்கள் மற்றும் எச்சரிக்கை கொடுக்க ஒலி பெருக்கி வசதிகளும் செய்யப்படுகின்றன. குற்றவாளிகளை கண்டுபிடிக்க 20 ரோந்து குழுக்கள், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இரவு 11 மணி வரை மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் 3 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், பலூனில் கண்காணிப்பு கேமராவை கட்டி பறக்க விட்டு, கடற்கரை முழுவதும் கண்காணிக்கப்படும்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்