நெல் கொள்முதல் விலையை ரூ.2,250 ஆக உயர்த்த ராமதாஸ் கோரிக்கை

நெல் கொள்முதல் விலையை ரூ.2,250 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசனத்திற்காக நடப்பாண்டில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு தாமதம் ஆனாலும், நீரிறைப்பான்களை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்ட பகுதிகளில், அறுவடை முடிவடைந்து விட்டது. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் விவசாயிகள் தங்களின் நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

நெல்லுக்கான கொள்முதல் விலை கட்டுபடியாகும் வகையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்தக் கோரிக்கை இன்றுவரை மத்திய, மாநில அரசுகளின் செவிகளில் விழவில்லை. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு நிர்ணயித்தது. சாதாரண வகை நெல் ஒரு குவிண்டாலுக்கு 1310 ரூபாயும், சன்ன வகை நெல் ஒரு குவிண்டாலுக்கு 1345 ரூபாயும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. நெல்லுக்கான கொள்முதல் விலையை கடந்த ஆண்டு ரூ. 170 உயர்த்திய மத்திய அரசு, நடப்பாண்டில் வெறும் ரூ.60 மட்டுமே உயர்த்தியிருக்கிறது.

இன்னொரு புறம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை நியாயமான அளவுக்கு உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காவிரி பாசன மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த போது ஜெயலலிதா வாக்குறுதி வழங்கினார். ஆனால், அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டார். மாறாக மத்திய அரசின் கொள்முதல் விலையுடன், முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட ஊக்கத் தொகையை மட்டும் சேர்த்து வழங்குவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். அதே அணுகுமுறை இந்த ஆண்டும் கடைபிடிக்கப்பட்டால் சாதாரண வகை நெல்லுக்கு 1360 ரூபாயும், சன்னவகை நெல்லுக்கு 1415 ரூபாயும் மட்டுமே கிடைக்கும். இது நிச்சயமாக போதுமான கொள்முதல் விலையல்ல.

வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன், 50% லாபத்தை கூடுதலாக சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தேசிய விவசாயிகள் ஆணையம் கடந்த 2006ஆம் ஆண்டில் பரிந்துரை அளித்தது. நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லின் உற்பத்திச் செலவு ரூ.1,757 என ஹரியானா அரசு மதிப்பிட்டிருக்கிறது. எனவே, தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி பார்த்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2,636 வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு இப்போது தான் முதன்முறையாக அவர்கள் குறுவைப் பயிர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டில் அவர்கள் பட்ட கடனை அடைக்க வேண்டுமானால் நடப்பாண்டில் நெல்லுக்கு கட்டுபடியாகும் விலையை தர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எனவே, காவிரிப் பாசன மாவட்டங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும்போது, விவசாயிகளின் நெருக்கடி நிலை மற்றும் சுமைகளை கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி இல்லாவிட்டாலும், குறைந்தபட்சமாக சாதாரண வகை நெல் ஒரு குவிண்டாலுக்கு 2250 ரூபாயும், சன்னவகை நெல்லுக்கு 2500 ரூபாயும் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE