சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் மறைக்கப்படும் உண்மைகள்

By எஸ்.கோவிந்தராஜ்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் கேரள அரசு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ஆகஸ்ட் 11, 12-ம் தேதிகளில் நடைபெற்ற நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முதல் முயற்சியாக இந்த அனுமதி விவகாரம் அமைந்துள்ளது.

சிறுவாணியில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், கேரள அரசும் அனுப்பிய கடிதத்துக்கு தமிழக அரசு பதில் அளிக்கத் தவறியதால் அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

முதல்வரின் கடிதம்

இப்பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரி மற்றும் அதன் துணை நதி களில் எந்தத் திட்டத்தையும் கர்நாடகம் மற்றும் கேரள மாநில அரசுகள் மேற் கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது’ என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆக, கேரள அரசின் அணை கட்டும் விவகாரத்துக்கும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் தொடர்பு இருப்பதை முதல்வர் ஜெயலலிதாவின் கடிதம் உறுதிப்படுத்தி உள்ளது.

பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பின் போராடி பெற்ற இந்த காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதும், அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தையும், கண்கா ணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும் என்பதும் தமிழக அரசின், தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை.

உரிமை பெற்ற கேரளம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறியதன் அடிப்படையில், பாம்பாற்றில் அணை கட்டி அங்கு 3 டிம்சி நீரை எடுத்துக் கொள்வதற்கும், பவானி படுகையில் (சிறுவாணி ஆற்றில்) அணை கட்டி 6 டிஎம்சி நீரை எடுத்துக்கொள்ளவும் கேரளாவுக்கு சட்ட ரீதியாக உரிமை உள்ளது என்பது புலனாகிறது. தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு பாதகமான இந்த அம்சத்தை அனுமதித்து விட்டு, இன்று வரை அதற்கு மேல் முறை யீட்டை சட்டப்படி செய்யாத தமிழக அரசு, தற்போது அரசியல் காரணங்களுக்காக சிறுவாணி மற்றும் பாம்பாற்றில் அணை கட்டுவதை எதிர்ப்பது போல் வேஷம் போடுகிறது என்பது மேற்கு மண்டல விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

26 குடிநீர் திட்டங்கள்

பாம்பாற்றில் அணை கட்டினால் அமராவதி ஆற்றுக்கு நீர் வரத்து பாதிக்கப் படும். அமராவதி ஆற்றை நம்பியுள்ள திருப்பூர், கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பாசனம் கேள்விக்குறியாகும். அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் 26 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நீரில் பற்றாக்குறை ஏற்பட்டு, 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் போகும்.

தமிழக - கேரள எல்லையான ஜி.டி.சாவடி பகுதிக்கு முன்பாக எந்த இடத்தில் வேண்டுமானாலும், கேரளம் 6 டிஎம்சி நீரை எடுத்துக்கொள்ள நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணியைத்தான் கேரள அரசு தற்போது தொடங்கி உள்ளது.

12 அணைகள் பாதிப்பு

கேரள அரசு நீர் எடுக்க உரிமை பெற்றுள்ள ஜி.டி.சாவடி பகுதிக்கு கீழ் பகுதியில் தமிழகத்தில் 12 தடுப்பணைகள் உள்ளன. எமரால்டு, எம்காண்டி, குந்தா, பைகாரா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, சாண்டியானா, கெலன், மாயாறு, பார்சன்வேலி, போத்திமூட், கெத்தை ஆகிய 11 நீர் மின் உற்பத்தி அணைகள் நீலகிரி மாவட்டத்திலும், பில்லூர் அணை கோவை மாவட்டத்திலும் உள்ளன. இந்த அணைகள் நீர் மின் உற்பத்தி மையங்களாகவும் இருந்து வருகின்றன.

அட்டப்பாடியில் அணை கட்டி 6 டிஎம்சி நீரை கேரளம் எடுக்குமானால், இந்த அணைகளின் நீர் இருப்பு கேள்விக்குறியாகும். மின் உற்பத்தி பாதிக்கப்படும். கோவை நீலகிரி மட்டுமல்லாது, பவானிசாகர் அணையை நம்பியுள்ள ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களும், குடிநீர் திட்டங்களும் பாதிப்படையும்.

தடுக்க முடியாது

தற்போது நமது வேண்டுகோள்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட்டு, கண்காணிப்பு குழுவும் அமைக்கப் பட்டால், பவானி படுகையான சிறுவாணி யில் இருந்து 6 டிஎம்சி நீர் மட்டும் எடுக்கப் படுகிறதா என்பதை கண்காணிக்க மட்டுமே அவர்களால் முடியும். அணை கட்டுவதையோ, நீர் எடுப்பதையோ தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

பாம்பாறு, பவானி படுகையில் கேரள அரசு எடுக்க வேண்டிய 9 டிம்சி நீரை, கபினியிலேயே எடுத்துக்கொள்ளலாம் என்ற மாற்றுத் திட்டத்தையாவது அரசு முன்வைத்து இருந்தால், சிறுவாணி அணை போன்ற பிரச்சினைகளை தடுத்து இருக்க முடியும்.

இனியாவது ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

பிரிவினையை ஏற்படுத்தும் பங்கீடு

பவானி ஆற்றில் சராசரியாக ஆண்டுக்கு 60 முதல் 70 டிம்சி நீர் வரத்து இருப்பதாக அளவிடப்படுகிறது. இதில், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு உட்பட்ட 24,500 ஏக்கருக்கு இரு போகத்துக்காக 16 டிஎம்சி நீரும், காளிங்கராயன் கால்வாய் பாசனத்துக்கு உட்பட்ட 15,400 ஏக்கருக்கு 10 டிஎம்சி நீரும், கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கருக்கு, இரு போக பாசனத்துக்கு 36 டிஎம்சி நீரும் வழங்க பொதுப்பணித் துறை வரையறை செய்துள்ளது. நீரின் அளவு குறையும்போது, அதற்கேற்ப சதவீத அடிப்படையில் அளவிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போதைய நிலையில் சராசரியாக 40 டிஎம்சி நீர் வரத்து மட்டுமே இருப்பதால், பாசனப் பரப்பு குறைந்ததோடு, பல பகுதிகள் ஒரு போக பாசனமாகவும் மாறிவிட்டன. இத்துடன் சிறுவாணியில் அணை கட்டப்பட்டால் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து வெகுவாக குறைந்து கடுமையான நீர் பற்றாக்குறையை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

குறைக்கப்பட்ட நீரின் அளவு

பவானி பாசனப் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 36 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட் டுள்ளது. இதன்படி, தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன பகுதிக்கு 4.65 டிஎம்சி, காளிங்கராயன் பாசனத்துக்கு 3.48 டிஎம்சி, கீழ்பவானி பாசனத்துக்கு 27.95 டிஎம்சி என குறைக்கப்பட்டுள்ளது. இந்த அளவு போக, மீதமுள்ள நீரை காவிரியில் சேர்க்க வேண்டும். மொத்தத்தில் 62 டிஎம்சி நீர் பெற்று வந்த பவானி பாசன விவசாயிகள், தற்போது 36 டிஎம்சி நீர் மட்டுமே பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய பாசன பகுதிகள்

கடந்த 1924-க்கு முன் 6 லட்சம் ஏக்கர் மட்டுமே காவிரி பாசனமாக இருந்தது. மேட்டூர் அணை கட்டிய பிறகு 18 லட்சமாக இது உயர்ந்தது. தற்போது 24 லட்சம் ஏக்கராக காவிரி பாசனம் மதிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீர் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், பவானி பாசனத்துக்கு நீர் அளவீடு குறைக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே 1286-ல் காளிங்கராயன் அணை கட்டப்பட்டது. 1490-ம் ஆண்டு கொடிவேரி அணை கட்டப்பட்டது. இந்த பாரம்பரிய பாசனப் பகுதிகளை, காவிரியில் பின்னாட்களில் ஏற்படுத்தப்பட்ட பாசனப் பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்காக புறக்கணிப்பது எவ்வகையில் நியாயம் என்பது விவசாயிகளின் கேள்வி. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சபை சார்பில், தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் (525/2013) தமிழக அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.

இதேபோல், அமராவதி ஆற்றில் 18 டிஎம்சி நீரைப் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உரிமை, நடுவர் மன்ற தீர்ப்பில் பறிக்கப்பட்டு, 10 டிஎம்சி நீரைத் தவிர மீதம் உள்ள நீரை காவிரியில் கலக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாசனப் பகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தட்டிக்கழித்த ஆட்சியாளர்கள்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு மற்றும் நீதிமன்றங்களில் தொடர் போராட்டம் நடத்தியும் அதற்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி.தளபதி கூறியதாவது:

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானபோது, பவானி ஆற்றில் இருந்து கேரளம் நீர் எடுக்க அனுமதித் தால் ஏற்படும் பாதிப்பு, ஏற்கெனவே பாரம் பரியமாக நாங்கள் பாசனம் செய்து வந்த நிலங்களுக்கான நீர் அளவு குறைப்பு போன்ற அபாயங்கள் குறித்து விவசாயி களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். பவானி பாசன விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.

அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் இந்த பாதிப்பு குறித்து கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதற்கு அவர், ‘சின்ன பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி போராட வேண்டாம். உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழக அரசே சரி செய்து கொடுக்கும்’ என்றார்.

அதன் பிறகு காவிரி நடுவர் மன்றத்தை அணுகினோம். ‘இறுதித் தீர்ப்பு கொடுக்கப்பட்டவுடன் மன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. உங்களது மேல் முறையீட்டை ஏற்க முடியாது’ என நடுவர் மன்றம் தெரிவித்துவிட்டது.

அதன்பிறகு, கடந்த 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தோம். இந்த மனுவை 2009-ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘காவிரி பிரச்சினை என்பது 4 மாநில நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினை. இதில், யாரையும் வாதி, பிரதிவாதியாக சேர்க்க முடியாது. நீங்கள் உங்கள் மாநிலத்திடம்தான் முறையீடு செய்ய வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பாசன பரப்புக்கு நீர் குறைந்துள்ளது குறித்து தற்போதைய காவிரி தொழில் நுட்பக் குழுமத்தின் தலைவராக உள்ள சுப்பிரமணியத்திடம் முறையிட்டோம். ‘தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனுவில், தமிழகத்தில் உள்ள எல்லா பாசனத் திட்டங்களிலும் நடுவர் மன்றத்தால் குறைக்கப்பட்டுள்ள பாசன பரப்பை மீண்டும் அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, மீண்டும் இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

மாநிலத்தில் நீர் அளவீடு தொடர்பான அறிவிப்பு, தமிழக அரசின் காவிரி தொழில்நுட்பக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களது நீர் அனுபவ உரிமை, பாசன பரப்பு குறித்து சரியான தகவலை நடுவர் மன்றத்துக்கு தமிழக அரசு கொடுக்காததுதான் இந்த பாதிப்புக்கு அடிப்படை காரணம்.

உண்மை கண்டறியும் குழு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முன்பாக காவிரி உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவினர் அமராவதி மற்றும் பவானி பாசன பரப்புகளை பார்க்கவோ, கணக்கிடவோ இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு கொடிவேரி பாசன சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தோம். அதில், ‘பவானி ஆற்று நீரை கேரளாவுக்கு கொடுக்காமல், வேறு வழியில் கொடுக்க வேண்டும். அதற்கு இறுதித் தீர்ப்பிலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதால் அதனை பின்பற்ற வேண்டும். எங்களுக்கான பாசன நீர் அளவை நடுவர் மன்றம் குறைத்ததை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளோம்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 3 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. செப்டம்பர் 18-ம் தேதி இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பாம்பாறு மற்றும் சிறுவாணியில் அணை கட்டும் விவகாரம் வெளியான பிறகும்கூட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்த உண்மையை, அதனால் நமக்கு ஏற்பட்டுள்ள இழப்பை தமிழக அரசு மறைக்கப் பார்க்கிறது.

இவ்வாறு சுபி.தளபதி கூறினார்.

காவிரி நடுவர் மன்றத்தின் பாதிப்புகள் குறித்து மேற்கு மாவட்ட விவசாயிகளின் கருத்தை அறிய தமிழக அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்துக்கு, குறிப்பாக மேற்கு மாவட்ட மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

இறுதித் தீர்ப்பு சொல்வது என்ன?

கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் சாராம்சம்:

* காவிரியில் ஓடும் மொத்த நீர் 740 டிஎம்சி (ஆண்டுக்கு) என அளவிடப்பட்டுள்ளது. இதில், கேரளாவுக்கு 30 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, சுற்றுப்புறச் சூழலுக்கு 10 டிஎம்சி, கடலில் சேரும் நீர் 4 டிஎம்சி என பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கான 192 டிஎம்சி நீரை கர்நாடகம் ஜூன் முதல் மே மாதம் வரை எவ்வளவு அளவுகளில் பிரித்து கொடுக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்துக்கு 419 டிஎம்சி என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகம் 192 டிஎம்சி நீரை மட்டுமே தரும். இதிலிருந்து 7 டிஎம்சி நீரை புதுவைக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள நீரை காவிரியின் கிளை நதிகளான அமராவதி, பவானி, நொய்யல், பாலாறு ஆகியவற்றில் இருந்தும், மழை நீர் வந்து சேரும் ஓடைகள், பள்ளங்கள் மூலமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கர்நாடகாவுக்கான 270 டிஎம்சி நீரில் 192.5 டிஎம்சி நீரை மட்டும் அவர்கள் காவிரியில் இருந்து எடுக்க வேண்டும். மீதம் உள்ளதை அவர்களது மாநிலத்தின் இதர ஆதாரங்களில் இருந்து எடுக்க வேண்டும்.

* காவிரி நதியின் மேட்டுப் பகுதியில் உள்ள கேரளாவுக்கு காவிரி நீர் செல்ல முடியாது என்பதால் கபினிக்கு வயநாட்டில் இருந்து செல்லும் நீரில் 21 டிஎம்சி நீரை அவர்கள் மாநில எல்லைக்குள் எடுத்துக்கொள்ளலாம். காவிரியின் கிளை நதியான பவானி படுகையில் இருந்து 6 டிஎம்சியும், அமராவதியின் கிளை நதியான பாம்பாற்றில் 3 டிஎம்சியும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்