தாலி அகற்றும் நிகழ்ச்சி: இடைக்காலத் தடைக்கு முந்திக் கொண்ட திராவிடர் கழகம்

By செய்திப்பிரிவு

தனி நீதிபதி உத்தரவு ரத்து: தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் தடை; உத்தரவு வருவதற்கு முன்பே 21 பெண்கள் தாலி அகற்றினர்

*

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு வருவதற்கு முன்பே வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் 21 பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றினர்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக இருந்த தாலி பற்றிய விவாத நிகழ்ச்சிக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சி நடக்கும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து தாலியை அகற்றிக் கொள்ளலாம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார்.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்தனர். இதை எதிர்த்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன், கருத்து சுதந்திரம் அடிப்படையில் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. மேல்முறையீட்டு மனு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி வீட்டில் நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்பட் டது. நீதிபதிகள் சதீஷ் கே. அக்னி ஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.

அரசு சார்பில் அட்வகேட் ஜென ரல் ஏ.எல்.சோமையாஜி, எதிர் மனு தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தியாகராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19 (2)(3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமையை வெளிப்படுத்த அனுமதி அளிப்பதா அல்லது இந்திய கலாச்சார, பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்து வதைத் தடுப்பது அவசியமா என்று மேல்முறையீட்டு மனுவில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. பொது அமைதி முக்கியம் என்பதால் மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது. இவ்வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

21 பேர் தாலி அகற்றினர்

இதற்கிடையே, காலை 10 மணிக்கு நடத்த திட்டமிட்டிருந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியை காலை 7 மணிக்கு முன்னதாகவே திராவிடர் கழகத்தினர் தொடங்கினர். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலையில், 21 பெண்கள் தங்கள் கணவருடன் மேடைக்கு வந்து, தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர்.

உயர் நீதிமன்றம் தடை விதித்த தகவல் காலை 9 மணிக்கு வந்தது. அப்போது பேசிய கி.வீரமணி, “உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டோம். நீதிமன்ற தடைக்கு சட்டப் பரிகாரம் காணப்படும். தொண்டர் கள் அனைவரும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அதனால், தொடர்ந்து நடக்கவிருந்த மாட்டுக்கறி விருந்து ரத்து செய்யப்பட்டு, தொண்டர்கள் கலைந்து சென்றனர். பெரியார் திடல் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தாலி அணிவது தனி நபர் விருப்பம்: குஷ்பு கருத்து

காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர் பாளரும், ‘பெரியார்’ திரைப்படத்தில் மணியம்மையாக நடித்தவருமான குஷ்புக்கு எதிராக தாலி தொடர்பான ஒரு சர்ச்சை அண்மையில் எழுந்தது. ருத்ராட்ச மாலையை தாலிக் கொடியாக குஷ்பு அணிந்துள்ளார் எனவும், இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் இது உள்ளதாகவும் கூறி ஒரு இந்து அமைப்பு சார்பில் கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி குறித்து ‘தி இந்து’விடம் குஷ்பு கூறியதாவது: பெரியார் காலத்தில் இருந்தே தாலி பற்றிய விவாதம் நடந்து வருகிறது. தாலி கட்டுவதும் மறுப்பதும் முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பமாகும். திராவிடர் கழகத்துக்கு ஒரு தத்துவம் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடக்கிறார்கள். அவர்கள் தினம் தினம் நடக்கும் தாலி கட்டிக் கொள்ளும் திருமணங்களை தடுத்து நிறுத்தவில்லையே. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் நிகழ்ச்சிதானே நடத்துகிறார்கள். ஜனநாயக நாட்டில் அதை மற்றவர்கள் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்? அந்த நிகழ்ச்சி சரியா தவறா என்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

தாலி கட்டிக் கொள்ளலாமா கூடாதா, திருமணம் செய்துகொள்ளலாமா, கூடாதா என்பதெல்லாம் தனி நபர் விருப்பம் சம்பந்தப்பட்டது. இதை வைத்து சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE