அரசு மருத்துவமனை காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்வு: தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர்

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25-ம் ஆண்டு விழாவையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்வி இடங்கள் அதிகப்படுத்தப்பட்டால் கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். இவ்வாறு, ஒரு மருத்துவக் கல்வி இடம் ஒதுக்கப்பட்டால் மத்திய, மாநில அரசு இணைந்து மருத்துவக் கல்லூரி வசதிக்காக ரூ.1.20 கோடி நிதியை ஒதுக்குகிறது. அந்த நிதி, மருத்துவக் கல்வி நிறுவனங்களை உயர்த்துவதற்காகப் பயன்படுத் தப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்பு வதற்கு மருத்துவ தேர்வாணையம் ஆன்-லைன் மூலமாகப் பதிவுகளைப் பெற்று உடனுக்குடன் தேர்வு நடத்தி வருகிறது. நர்சிங் தேர்வுக்கும், மருத்துவத் தேர்வு வாரியம் மூலமாக விரைந்து மேற்கொள்ளப்படுகிறது. எண்ணற்ற பேர் தேர்வாகி வருகின்றனர்.

உடல் உறுப்பு மாற்று சிகிச்சையை பொறுத்தவரை தமிழகத்தில் தேவையான மருத்துவர்கள் உள்ளனர். அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக அரசு மருத்துவமனைகள் தங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு நிதி கிடைத்து வருகிறது. இதனால், அப்பல்லோ, மியாட் போன்ற தனியார் மருத்துவமனைகள் வாங்கும் விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்கள் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் வாங்கப்பட்டு வருகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளும் முன்னேற்றம் கண்டு வருகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE