சென்னை வருகிறது அமெரிக்க கப்பல் ஆயுதங்கள்
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை, கடலோரக் காவல் படையினர் கடந்த 12-ம் தேதி சிறை பிடித்தனர்.
இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து, கப்பலில் இருந்த 35 பேரைக் கைது செய்தனர்.
கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5,680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆயுதங்கள் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆயுதக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஆயுதங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக கப்பலில் கைது செய்யப்பட்டவர்கள் முறையாக பதில் சொல்லவில்லை. முறையான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களின் தன்மை, திறன் குறித்து சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின் ஆயுதங்கள் பிரிவு நிபுணர்களிடம் பரிசோதனை செய்ய கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஆயுதங்கள் அனைத்தும், தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் சி.கதிரவன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை இரவு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.