நெல் கொள்முதல் விலை ரூ.1,360 ஆக உயர்வு : ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,360 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,415 ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நடப்பு காரீப் பருவத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி, சாதாரண நெல்லுக்கான விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,310 ரூபாய் என்றும், சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,345 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் பொருட்டு இன்று (26.9.2013) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்; மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்தாய்விற்குப் பின்னர், நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,310 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 50 ரூபாய் வழங்கவும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,345 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 70 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்படி, சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,360 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,415 ரூபாயும் 1.10.2013 முதல் வழங்கப்படும்.

மேலும், நெல் விளையும் பூமியான காவேரி பாசனப் பகுதிகளில், தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுமதி வழங்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

காவேரிப் பாசனப் பகுதி அல்லாத இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்குமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதோடு அவர்களின் வாழ்வில் மேலும் ஏற்றத்தை அளிக்கவும் வழிவகுக்கும்” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE