உதவியை நாடும் கிராமங்களை தத்தெடுக்காமல் தவிர்த்தது ஏன்? - எம்.பி-க்களுக்கு மக்கள் கேள்வி

தருமபுரி மாவட்டத்தில் குக் கிராமங்களை தவிர்த்து, வளர்ச்சி பெற்ற கிராமங்களை எம்.பி-க்கள் தத்தெடுத்திருப்பது தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ளது.

மத்திய அரசு, ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தங்கள் தொகுதியில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும், மாநிலங் களவை உறுப்பினர்கள் எந்த தொகுதியிலும் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்கலாம் என்று வலியுறுத்தியது.

தருமபுரி தொகுதி எம்.பி-யான அன்புமணி ராமதாஸ் மோட்டாங்குறிச்சி கிராமத்தைத் தத்தெடுத்தார். அதிமுக-வைச் சேர்ந்த 9 எம்.பி-க்கள் தருமபுரி மாவட்டத்தில் 9 கிராமங்களை தத்தெடுத்தனர். இது தொடர்பாக தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தருமபுரியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் பாமக சார்பில் 1, அதிமுக சார்பில் 9 என மொத்தம் 10 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 10 கிராமங்களும் அடிப்படை தேவைகளில் இன்னும் வளர்ச்சியடைய வேண்டியவை தான். ஆனால், தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட பல அடிப்படை இல் லாத பல கிராமங்கள் உள்ளன.

இதுபோன்ற பகுதிகளில் காடுகளிலும், வனங்களுக்கு இடையேயும் நடந்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற கிராமங்கள்தான் தத்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அடிப்படை தேவைகளை பார்த்திராத கிராம மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, எம்.பி-க்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாம். தத்தெடுக்கும் கிராமங்களை மாற்றிக்கொள்ள தற்போதும் வாய்ப்பிருக்கும் பட்சத்தில், அடிப்படை தேவைகளே இல்லாத கிராமங்களை தேர்வு செய்யலாமே. அரசியல் உள்நோக்கங்களுக்காக மேற் கொள்ளும் செயலாக கருதினால் வசதிகள் இருக்கும் ஊருக்கே தங்களின் சேவைகளை தொடரட்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE