யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் வயது வரம்பைக் குறைக்க வைகோ எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் வயது வரம்பைக் குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய குடிமைப் பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போன்ற முக்கிய நிர்வாகப் பணிகளுக்கு மத்திய தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை மத்திய அரசு குறைத்து அறிவித்ததோடு, அதனை வரும் 2015 ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப் போவதாகவும் முடிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது ஆகும்.

இன்றுவரை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வயது வரம்பு என்னவென்றால், பட்டியல் சாதி வகுப்பினரான தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 21 வயது முதல் 35 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நடைமுறையை மாற்றி, இனிமேல் 29 வயது வரைதான் தேர்வு எழுத முடியும் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 21 வயது முதல் 33 வயது வரை தேர்வு எழுதலாம் என்று இருந்த நிலையை மாற்றி 28 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும், பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 30 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நிலையை மாற்றி, 25 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும் மத்திய அரசு முடிவு செய்து, இதனை வரும் 2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் போவதாக மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்திருக்கிறார்.

முன்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைத்த இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தனது பத்தாவது அறிக்கையில் இவ்விதம் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுகள் எழுதுகின்றவர்களின் வயது வரம்பை குறைத்து அறிக்கை தந்தது. அது மிக மிக தவறான அணுகுமுறையாகும்.

மிகுந்த ஈடுபாட்டுடன் இரவு பகலாகப் படித்து, கடுமையாக உழைத்து தேர்வுக்கு தங்களை தயார் செய்துகொண்டு தேர்வு எழுதுகையில், தேர்வு பெறாமலும் அல்லது நேர்காணலில் வெற்றி பெறாமலும் வாய்ப்பு இழக்கும்போது மீண்டும் மீண்டும் முயன்று தேர்வில் வெற்றி பெறுவதற்கு இதுவரை இருந்த வயது வரம்பு பெரிதும் உதவியது. குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து இந்தத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயன்பெற்றனர்.

சமூக நீதி கொள்கைக்கு மாறாகவும், கடுமையாக உழைத்து முயலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் விதத்திலும் தற்போது குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு அமைந்துள்ளது. எனவே இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவித்துள்ள வயது வரம்பினை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE