செவிலியர் பட்டயப் படிப்பு குளறுபடியை சரிசெய்ய வைகோ வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குளறுபடிகளை சரிசெய்யுமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் செவிலியர் பட்டயப் படிப்பில் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அறிவியல் பிரிவில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை எனவும், காலி இடங்கள் இருந்தால் மற்றப் பிரிவுகளில் பயின்றவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், கணினி அறிவியல் போன்று செவிலியர் பயிற்சிப்பிரிவும் 76 பள்ளிகளில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் சேரும் மாணவியர்கள் செவிலியர் ஆகவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இந்தப் பிரிவில் சேர்ந்து பயில்கிறார்கள். இவர்களுக்கு இடமில்லை என்று சொல்வது வேதனைக்குரிய செயலாகும்.

இந்தக் கல்வி ஆண்டில் விண்ணப்பித்து இருந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயில்வதற்கு இடம் கிடைக்காமல் எதிர்காலம் இருண்டுவிட்ட வேதனையில் தவிக்கின்றனர். மேலும், தற்பொழுது பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பயிலும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி, மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும், அறிவியல் பிரிவில் படித்த மாணவிகளுக்கும் சமவாய்ப்பினை அரசு செவிலியர் கல்லூரிகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்' என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE