அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மீனலெட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் ஏற்கெனவே 2013-ம் ஆண்டில், அங்கன்வாடி பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், மாவட்ட வாரியாக நேர்முகத் தேர்வு நடத்தி, காலி யிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பில், எத்தனை பணியாளர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர், இடஒதுக்கீடு முறை உள்ளதா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

பணியிடங்களை நிரப்பும்போது பொது அறிவிப்பை வெளியிட்டு, காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.

நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இது ஏற்புடையது அல்ல. ஆட்கள் தேர்வு செய்வதற்கு முன்பே, யாரை நியமிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், அந்த அறிவிப்பில் அந்தந்த இடங்களில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரானது.

எனவே, அங்கன்வாடி பணி யாளர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.எஸ். முகம்மது முகைதீன் வாதிடும்போது, நியமனம் தொடர்பாக 2013-ல் அரசு பிறப்பித்துள்ள உத்தரவுப் படிதான் ஆட்கள் தேர்வு செய்யப் படுகின்றனர். தற்போது அங்கன் வாடி பணியாளர் நியமனம் தொடர்பாக ஆட்சியர்கள் அறிவிப்புதான் வெளியிட் டுள்ளனர். அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை.

அரசாணையை யாரும் எதிர்க்கவில்லை. எனவே, அந்த அரசாணை அடிப்படையில் நடைபெறும் நியமனங்களை எதிர்க்க முடியாது என்றார்.

இதையடுத்து, அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்க சமூக நலத்துறை மற்றும் சத்துணவு செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசார ணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE